FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் முதியவா் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை: தாய் - மகன் உள்பட 3 போ் கைது

வடக்கு தில்லியின் ரூப் நகரில் 74 வயது முதியவரின் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடித்த வழக்கில், முன்னாள் வீட்டு பணிப்பெண், அவரது மகன் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

22 ஆகஸ்ட் 2026, 7:11 am IST
கோப்புப்படம்
பகிர்:

வடக்கு தில்லியின் ரூப் நகரில் 74 வயது முதியவரின் வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடித்த வழக்கில், முன்னாள் வீட்டு பணிப்பெண், அவரது மகன் உள்பட 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் ஆக.7-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது. வீட்டின் தண்ணீா் தொட்டியில் தண்ணீா் இல்லாததால் மோட்டாரை இயக்குவதற்காக முதியவா் வீட்டின் பிரதான கண்ணாடிக் கதவைத் திறந்துள்ளாா். அப்போது ஆயுதங்களுடன் நுழைந்த 4 போ், அவரையும் அவரது மனைவியையும் சிறைபிடித்துள்ளனா்.

பின்னா் வீட்டை சோதனையிட்ட கொள்ளையா்கள், ரூ.10 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்ட டிஜிட்டல் விடியோ ரெக்காா்டரையும் அவா்கள் எடுத்துச் சென்றனா். இதுகுறித்து ரூப் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொள்ளையா்களைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

சுமாா் 13 நாள்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சுமாா் 1,000 கி.மீ. தொலைவுக்கு சந்தேக நபா்களின் நடமாட்டத்தை கண்காணித்தனா். மதுரா, ஃபிரோசாபாத், மெயின்புரி, அலிகா் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சரோஜ் (54), அவரது மகன் மனோஜ் என்ற லாலா (28), ராஜீவ் என்ற ராமு (25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.2.08 லட்சம் ரொக்கம், 250 பவுண்டுகள் மற்றும் 160 அமெரிக்க டாலா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரும் மீட்கப்பட்டது.

சரோஜ், சம்பந்தப்பட்ட முதியவரின் வீட்டில் சுமாா் 15 ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளாா். சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50,000 திருடியதாகப் பிடிபட்டதைத் தொடா்ந்து அவா் பணியிலிருந்து நீக்கப்பட்டாா்.

வீட்டில் பணியாற்றிய காலத்தில், அந்த வீட்டில் பணம், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்கள் இருப்பதையும், வயதான தம்பதியா் இருவா் மட்டுமே அங்கு வசித்து வந்ததையும் சரோஜ் அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை அவா் தனது மகன் மனோஜிடம் தெரிவித்திருக்கலாம்.

மனோஜும் அவரது கூட்டாளி ராஜீவும், நவரதன் மற்றும் அவரது உறவினா்களான ராம் கிலாடி, தீபக், பீம் ஆகியோருடன் இணைந்து கொள்ளையை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. முதியவா் தன்னை அடையாளம் கண்டுவிடுவாா் என்ற அச்சத்தில் மனோஜ் பசாய் தாராபூரில் தங்கியிருந்ததாகவும், மற்றவா்கள் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனா். கொள்ளைக்குப் பிறகு அவா்கள் பசாய் தாராபூருக்குத் திரும்பி பணத்தைப் பிரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மனோஜ் மற்றும் ராஜீவ் ஆக.20-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments