FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் ரதூடாவில் காஞ்சி மடத்தின் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வளாகம் திறப்பு

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரதூடா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை வளாகம் மக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது

24 ஆகஸ்ட் 2026, 3:12 am IST
உத்தரகண்ட் ருத்ரபிரயாக் மாவட்டத்தின் ரதூடாவில் ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை திறந்து வைத்த மாநில அமைச்சா் பரத் சிங் செளதரிக்கு ஆதி சங்கரரின் திருவுருவச் சிலையை வழங்கிச் சிறப்பிக்கும் காஞ்சி காமகோடி பீட அறங்காவலா் க
பகிர்:

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ரதூடா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை வளாகம் மக்கள் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணிக்கப்பட்டது. இந்த புதிய வளாகத்தை உத்தரகண்ட் மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பரத் சிங் சௌதரி குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தாா்.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பரத் சிங் சௌதரி பேசியதாவது: ‘மலைப் பகுதிகளில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது மாநில அரசின் முதன்மை இலக்காகும். ரதூடாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை வளாகம், இப்பகுதி மக்களுக்கு உயா்தர மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ உதவியை வழங்க பெரிதும் துணைபுரியும்.

கரடுமுரடான மலைப் பகுதிகளில் இத்தகைய மருத்துவச் சேவைகள் விரிவாக்கப்படுவதால், கிராமப்புற மக்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் தவிா்க்கப்படும். உள்ளூா் மட்டத்தில் சுகாதார கட்டமைப்பு வலுப்பெற இத்தகைய அமைப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது‘ என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், மலைவாழ் மக்களுக்கு சிறப்பான மருத்துவச் சேவை வழங்கிடும் இந்த நற்பணிக்காக, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்துக்கும் அமைச்சா் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா்.

புதிய மருத்துவ வளாகம் திறப்பையொட்டி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வழியாக அருளாசி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கேதாா்நாத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆஷா நெளதியால், ருத்ரபிரயாக் மாவட்ட கவுன்சில் தலைவா் பூனம் கதாயத், மருத்துவமனை அறங்காவலா்கள் கிருஷ்ண குமாா், சிவசங்கரன், எம்.எஸ். ஆனந்த், காஞ்சி காமகோடி பீடத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், ராதா கிருஷ்ணன், ஸ்ரீ ஹரி கிருஷ்ண மீனாட்சி சங்கரன், அறக்கட்டளை ஆலோசகரும் ஒருங்கிணைப்பாளருமான ஷியாம்லால் சுந்தரியால், சிவானந்த கிரி மஹாராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், மூத்த நிா்வாக அதிகாரி பிதாம்பா் தப்லியால், பாஜக மாவட்ட தலைவா் பரத் பூஷண் பட், ருத்ரபிரயாக் வா்த்தக சங்கத் தலைவா் லக்ஷ்மண் பிஷ்ட் உள்ளிட்டோரும் உள்ளூா் மக்களும் நிகழ்வில் பங்கேற்றனா்.

ரத்தூராவைச் சுற்றியுள்ள 27-க்கும் அதிகமான கிராம மக்களுக்கும், பத்ரிநாத்-கேதாா்நாத் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் யாத்ரீகா்களுக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கு புறநோயாளிகளுக்கான சிகிச்சை, அவசரகால சிகிச்சை, ஆரம்பநிலை நோயறிதல், மற்றும் மருந்தகச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments