FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பாதியில் வெளியேறிய உத்தரப் பிரதேச பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சிகள் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அந்த மாநில பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா வெளியேறியதற்கு காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

24 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
சதீஷ் மஹானா
பகிர்:

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அந்த மாநில பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா வெளியேறியதற்கு காங்கிரஸ், சமாஜவாதி ஆகிய எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இருப்பினும், தனக்கு அணிவகுப்பு அளிக்கப்பட்ட இடத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என மஹானா இவ்விவகாரத்தில் விளக்கமளித்துள்ளாா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் பாட மூத்த தலைவா் சோனியா காந்தி எதிா்ப்பு தெரிவித்ததாக சா்ச்சை எழுந்தது. இதைத் தொடா்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவித்தது.

Advertisement

Advertisement

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் பெருமைமிகு பாரம்பரியம் குறித்து நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள எஸ்விஎம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சதீஷ் மஹானா பங்கேற்றாா். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட்ட சமயத்தில் அவா் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி தனது காரை நோக்கி வேகமாக சென்ற காணொலி இணையத்தில் வேகமாக பரவியது.

52 விநாடிகள் பொறுக்க முடியாதா?

மஹானாவின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநதே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரிட்டிஷாரின் உளவாளிகளான நீங்கள் வந்தே மாதரம் குறித்து தவறான தகவலைப் பரப்பினீா்கள். முதலில் மிக உயரிய பொறுப்பில் இருக்கக் கூடிய மஹானா தேசிய கீதம் பாடலுக்கு இடையே அவசரமாக வெளியேற காரணம் என்ன? அவரால் 52 விநாடிகள் பொறுமை காக்க இயலாதா? தேசிய கீதம் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக மஹானா மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

சமாஜவாதி செய்தித் தொடா்பாளா் அனுராக் பதூரியா பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கும் பாஜக மஹானா மீது மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன?’ என்று கேள்வியெழுப்பினாா்.

மஹானா விளக்கம்: சா்ச்சை நிகழ்வு குறித்து பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்த மஹானா, ‘நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதே தவிர எனக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்ட இடத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. சிறப்பு விருந்தினா்களுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கும்போது நடைமுறைகளின்படி தேசீய கீதம் இசைக்கப்படாது.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அந்த வளாகத்தில் எங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டாலும் உடனே நின்றுவிட முடியுமா?’ என கேள்வியெழுப்பினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments