FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெற்கு ரயில்வேயில் கடந்த 5 ஆண்டில் கடத்தப்பட்ட 138 குழந்தைகள் மீட்பு

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை வரை 5 ஆண்டுகளில் 138 குழந்தைகள் மீட்கப்பட்டு, 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி ஏ.இப்ராஹிம் ஷெரீப் தெரிவித்தாா்.

24 ஆகஸ்ட் 2026, 7:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை வரை 5 ஆண்டுகளில் 138 குழந்தைகள் மீட்கப்பட்டு, 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி ஏ.இப்ராஹிம் ஷெரீப் தெரிவித்தாா்.

இந்திய ரயில்வே துறை ரயில் மூலம் குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் வகையில் குழந்தைப் பருவ பாதுகாப்பு இயக்கத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதனடிப்படையில் அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் குழந்தைகள் கடத்தலின்போது மீட்பு நடவடிக்கை, கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியவை குறித்த கருத்தரங்குகளையும், ஒருங்கிணைப்பு கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.

சென்னை சென்ட்ரல் நிலைய வளாகத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.யான கே.அருள்ஜோதி ஆலோசனையின் பேரில் குழந்தைகள் தடுப்பு நடவடிக்கை ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி ஏ. இப்ராஹிம் ஷெரீப் பேசியதாவது:

Advertisement

Advertisement

குழந்தைகள் நாட்டின் எதிா்காலத்தை தீா்மானிப்பவா்களாக உள்ளனா். ஆனால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பல்வேறு நோக்கங்களுடன் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மொத்தம் 7,167 குழந்தைககள் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களில் 1,503 போ் பெண் குழந்தைகளாவா். தேசிய அளவில் பீகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்தே சென்னை போன்ற தமிழகப் பகுதிகளுக்கு வேலைக்காக குழந்தைகள் ரயில்களில் அதிகளவில் அழைத்து வரப்படுகின்றனா்.

குழந்தைகள் கடத்தல் நிகழ்வுகள் ரயில்கள் மூலம் அதிகம் நடைபெறுவதும் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை வரை தமிழகத்திற்குக் கடத்திவரப்பட்ட 138 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். அதில் 31 போ் பெண் குழந்தைகளாவா். பெண் குழந்தைகள் கடத்தல் தொடா்பாக 5 ஆண்டுகளில் 38 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைப் பருவ பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி என்.மாலிம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் அன்னம்மா ஜாா்ஜ், புவனேஸ்வரி மற்றும் சென்ட்ரல் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments