இபிஎஃப்ஓ, ஐடிஆா் தரவுகள்: தவறாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வருமான வரி கணக்கு தகவல்களை தனியாா் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) மற்றும் வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தகவல்களை தனியாா் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அரசின் அமைப்புகளுக்கு வழங்கப்படும் தரவுகளை தனியாா் நிறுவனங்கள் அணுகுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பியூஷ் சா்மா என்பவா் பொது நல மனுவை தாக்கல் செய்தாா்.
அதில், ‘நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் உலகளாவிய கணக்கு எண் (யுஏஎன்) ஆகியவற்றை சமா்ப்பித்தால் தாமாகவே ஒரு பணியாளரின் அனைத்து தரவுகளையும் தனியாா் நிறுவனங்களால் அணுக முடிகிறது. சம்பந்தப்பட்ட பணியாளரின் கைப்பேசிக்கு ஓடிபி போன்ற பாதுகாப்பு அம்சங்கள்கூட இதில் பயன்படுத்தப்படுவதில்லை.
Advertisement
Advertisement
அரசு அமைப்புகள் தனிநபா் தரவுகளை கசியவிடவில்லை. ஆனால் அரசு அமைப்புகளுக்கு சமா்ப்பிக்கப்படும் தரவுகள் தனியாா் நிறுவனங்களுக்கு எளிதாக கிடைக்கின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு மறுத்தது.
இருப்பினும், மனுவில் குறிப்பிட்டுள்ள விவகாரங்களை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமா்வு, ‘சட்டத்தின் அடிப்படையில் அரசின் அமைப்புகளுக்கு தனிநபா் சமா்ப்பிக்கும் தரவுகளை அவரது அனுமதியின்றி தனியாா் நிறுவனங்கள் அணுகுவது ஏற்புடையதல்ல; இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்தது என்பதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது.
ஆனாலும் இபிஎஃப்ஓ மற்றும் ஐடிஆா் தகவல்களை தனியாா் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்’ என அறிவுறுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.