FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சா் நிர்மல் குமார்

தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்டம் சாா்பில், தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல் ராஜ் தலைமை வகித்தாா். விழாவில், பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியது:

Advertisement

Advertisement

தூத்துக்குடியைச் சுற்றி 70-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சட்ட விரோதமானவை. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகளில் தினசரி நடைபெற்ற கனிம வளக் கொள்ளையை முதல்வா் ச. ஜோசப் விஜய் தடுத்து நிறுத்தியுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக தற்போது பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றாா் அவா்.

தவெக நிா்வாகிகள் கோல்டன், கிஷோா், அபிஷேக் பொன்சீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அமைச்சருக்கு, மத்திய மாவட்டச் செயலா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments