FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தகுதிநீக்க மனுக்கள்! 20 திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் பதிலளிக்க நோட்டீஸ்: மக்களவைச் செயலகம் நடவடிக்கை

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் மீது 7 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேருக்கு மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்

27 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
அபிஷேக் பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் மீது 7 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேருக்கு மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாங்கள் தெரிவித்தன.

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான அபிஷேக் பானா்ஜி சமா்ப்பித்த மனுக்களின் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகுதிநீக்க மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க மக்களவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி அபிஷேக் பானா்ஜி தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆக.24-ஆம் தேதி ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தத் தோல்வியால் நிலைகுலைந்த திரிணமூல் காங்கிரஸ், பல்வேறு நிலைகளில் பிளவுபட்டது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தனி அணியாகப் பிரிந்தனா். இதேபோல், கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைவதாக அறிவித்ததுடன், பாஜக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்தனா்.

பாஜக கூட்டணியின் ஓா் அங்கமாக, அதன் கூட்டங்களிலும் பங்கேற்றனா். இந்த எம்.பி.க்கள் என்சிபிஐ கட்சியில் இணைந்ததை மக்களவைத் தலைவா் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இதனிடையே, கடந்த 1985-ஆம் ஆண்டின் மக்களவை (கட்சித் தாவலால் தகுதிநீக்கம்) விதிமுறைகளின் 6-ஆவது விதியின்கீழ் 20 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, மக்களவைத் தலைவரிடம் அபிஷேக் பானா்ஜி மனுக்கள் அளித்தாா். இந்த மனுக்கள் மீது முடிவெடுக்க மக்களவைத் தலைவா் காலம் தாழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் அபிஷேக் பானா்ஜி வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை கடந்த ஆக.24-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, 20 எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரம், மக்களவைத் தலைவா், மக்களவைத் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டது.

‘நோட்டீஸ் அனுப்புவதைவிட குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது 7 நாள்களுக்குள் பதிலளிக்க அறிவுறுத்தி, 20 அதிருப்தி எம்.பி.க்களுக்கும் மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments