ஓணம் பண்டிகை! வயநாட்டில் பிரமாண்ட பூக்கோலம்! கழுகுப் பார்வையில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வயநாட்டில் பிரமாண்ட பூக்கோலத்தின் கழுகுப் பார்வை
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்திலும் கேரள மக்கள் வாழும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வயநாட்டில் மிகப் பிரமாண்ட பூக்கோலம் போடப்பட்டிருந்தது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறப் பகுதியான இருளத்தில், உள்ளூர் பள்ளி வளாகத்தில் வண்ணமயமான மலர் இதழ்களால் ஆன பிரமாண்ட கலைப்படைப்பாக மாறியுள்ளது அத்தப்பூ கோலம்.
சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில், 7 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான 'பூக்களம்', ஓணம் கொண்டாட்டங்களுக்கு இடையே ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Advertisement
Advertisement
மிகப் பிரமாண்டம் என்ற அளவையும் வண்ணமயமான வடிவமைப்பையும் தாண்டி, இந்தப் படைப்பு சமூகத்தின் மன உறுதியையும், 'மணியன்' என்ற காட்டு யானைக்கான மறக்க முடியாத அஞ்சலியையும் வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முழு கிராமத்தையும் ஒரே கலாசாரக் குடையின் கீழ் ஒன்றிணைக்கும் விருப்பத்திலிருந்தே இந்த மாபெரும் முயற்சி உருவானதாம்.
இருளம் லயன்ஸ் கிளப், அப்பகுதியில் செயல்படும் மன்றங்கள், கலாசார அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டு முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், அக்கிராமத்தின் முதல் பிரமாண்ட ஓணம் விழாவாக மலர்ந்துள்ளது.
இருளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரந்த நிலப்பரப்பை அலங்கரிக்க, கர்நாடகத்தின் குண்ட்லுபெட் என்ற ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட சாமந்தி மற்றும் வாடாமல்லி உள்ளிட்ட 10 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அத்தப்பூ கோளம் போடும் வேலையில் ஏராளமான குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் தாமாக ஒன்றிணைந்து, மலர் இதழ்களைப் பறித்தல், மலர்களைக் கொண்டு சேர்த்தல் மற்றும் விரிவான வடிவமைப்பைச் செயல்படுத்த உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சாதனைக்கு பல்வேறு சவால்கள் இருந்த போதும் அசைக்க முடியாத சவாலாக மாறியது மழைதான். முதலிலேயே இந்த பூக்களத்துக்கு சுண்ணாம்பால் வரைந்தபோதே இரண்டு முறை மழை பெய்து அழித்துவிட்டதாம்.
பிறகுதான், மழைக்கு சவால் விடும் வகையில், திங்கள்கிழமை மாலையில் தன்னார்வலர்கள் ஒருபக்கம் வரைபடத்தை வரையும்போதே அடுத்த பக்கம் மலர்களை அடுக்கி வைக்கலாம் என ஒரே நேரத்தில் பூக்கோலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இரவு முழுவதும் 11 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது உழைத்த 40 முக்கியக் கலைஞர்கள், விடியற்காலையில் அந்த அற்புதமான கலைப்படைப்பை முழுமையாக நிறைவு செய்திருந்தனர். காலை விடிந்தபோது, இந்த பூக்களம் மலர்ந்திருந்தது.
கட்டன மணியன் என்ற யானை, இருளம், புல்பள்ளி மற்றும் சுல்தான் பத்தேரி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள காடுகளில் வாழ்ந்து வந்தது. செப்டம்பர் 2019-ஆம் யானை மரணமடைந்த நிலையில், அதற்கு செலுத்தப்பட்ட கலைநயமிக்க அஞ்சலியாக இப்படைப்பு அமைந்துள்ளது.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் குறித்த வழக்கமான செய்திகளுக்கு இடையே, மணியன் என்ற காட்டு யானைக்கும் இருளம் பகுதி மக்களுக்கும் இடையே ஒரு சிறப்பான நட்பும் பாசமும் இருந்தது. கூர்மையான தந்தங்களுடன் சுமார் ஒன்பது அடி உயரம் கொண்ட மணியன் பார்க்கத்தான் பெரியவர் போல இருப்பான், குணத்தில் சாதுவான குழந்தையின் இயல்புடைன் பழகியதால் அப்பகுதி மக்களிடையே புகழ்பெற்றிருந்தது;
உள்ளூர் மக்கள் அதன் பெயரைச் சொல்லி அழைக்கும்போது, பழங்களையும் தின்பண்டங்களையும் பெற்றுக்கொள்ள அது காட்டிலிருந்து வெளியே வரும். சாலை ஓரங்களிலும் விளையாட்டு வளாகங்களிலும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் அது நின்றிருந்தது; ஒரு யானைக் கூட்டத்துடனான மோதலின்போது மணியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தபோது, ஒட்டுமாத்த கிராம மக்களும் வேதனை அடைந்தனர். அமைதியான முறையில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது நினைவுக்கூரத்தக்கது.
Onam Festival A grand Pookalam in Wayanad An aerial view
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.