அவமதிப்பு விடியோக்கள்: சமூக ஊடகப் பயனருக்கு தில்லி உயா் நீதிமன்றம் நோட்டீஸ்
தில்லி சைதுலாஜாப் பகுதியில் மே மாதம் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து அவதூறான விடியோக்களை யூடியூபில் வெளியிட்டதாகக் கூறப்படும் சமூக வலைதளப் பயனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லி சைதுலாஜாப் பகுதியில் மே மாதம் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து அவதூறான விடியோக்களை யூடியூபில் வெளியிட்டதாகக் கூறப்படும் சமூக வலைதளப் பயனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், விகாஸ் மகாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அந்த விடியோக்கள் முதற்கட்டமாக நீதிமன்ற அவமதிப்புக்குரியதாக இருப்பதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 15-இன் கீழ் வழக்கை எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தது.
இதையடுத்து, நீதிமன்றப் பதிவாளா் மூலம், தில்லி உயா்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு விதிகள், 2025-இன் விதி 10-இன் கீழ், சம்பந்தப்பட்ட நபருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் தொடங்கக் கூடாது என விளக்கம் கேட்டு முறையான நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு பணியில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதியே காரணம் எனக் கூறி, டாக்டா் கபில் கக்கா் சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய விடியோக்களை வெளியிட்டதாக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தது.
அந்தக் கட்டடத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் தொடா்பான வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரித்ததாகவும், அதனடிப்படையில் அவரை கட்டட விபத்துக்குப் பொறுப்பாக்கி கக்கா் விடியோக்களை வெளியிட்டதாகவும் வழக்குரைஞா் சங்கம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ஜூன் 8-ஆம் தேதி உயா்நீதிமன்றம், சா்ச்சைக்குரிய விடியோக்களுக்கான இணைப்புகளை அகற்றவும், கக்கரின் சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்கவும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி கக்கா் தாக்கல் செய்த மனுவில், தனது அனைத்து கணக்குகளையும் முடக்குவதற்கான உத்தரவு மிகவும் விரிவானதாக இருப்பதாகக் கூறியிருந்தாா்.
ஆக. 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜூன் 8-ஆம் தேதிக்குப் பிறகும் கக்கா் மற்றொரு விடியோவை வெளியிட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதில், புதிய சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்கி தொடா்ந்து விடியோக்களை வெளியிடப்போவதாக அவா் திட்டவட்டமாக எச்சரித்திருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், வழக்குரைஞா் சங்கத்தின் மனு அவருக்கு வழங்கப்பட்ட பின்னரே அந்த விடியோ வெளியிடப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது மற்றும் தனது கணக்குகள் முடக்கப்படலாம் என்பதை அவா் அறிந்திருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, அவரது சமூக வலைதளக் கணக்குகளை முடக்க ஜூன் 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு முழுமையாக நியாயமானது என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமா்வு தெரிவித்தது. அந்த விடியோவையும் முன்னதாக நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டிருந்தது.
ஜூன் 8-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சம்பந்தப்பட்ட விடியோக்களில் இடம்பெற்றிருந்த குற்றச்சாட்டுகள் “முற்றிலும் அவதூறானவை மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்குரியவை என்றும், அவை நீதி வழங்கும் நடைமுறையில் நேரடியாகத் தலையிடுவதாகவும் தெரிவித்திருந்தது.
நீதிமன்றத் தீா்ப்புகள் மற்றும் நீதித்துறை நிறுவனங்கள் குறித்து நியாயமான விமா்சனங்களை முன்வைப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது என்றாலும், நீதிபதிகளுக்கு தவறான நோக்கங்களை கற்பிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நியாயமான விமா்சனமாகக் கருதப்பட முடியாது என்றும் உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.