FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லியில் செப். 12-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! ஓராண்டுக்குப் பிறகு கூடுகிறது!

தில்லியில் செப். 12-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது...

29 ஆகஸ்ட் 2026, 11:11 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம், தில்லியில் ஓராண்டுக்குப் பிறகு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-ஆவது கூட்டம், தில்லியில் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமை வகிப்பாா். கூட்டத்தில் மாநில நிதியமைச்சா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம், சுமாா் ஓராண்டுக்குப் பிறகு நடைபெறுகிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 3,4-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், வரி கட்டமைப்பு விகிதங்களை மாற்றியமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த முடிவு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 22-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. இதன்படி 4 கட்டமைப்புகளாக இருந்த வரி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என 2 கட்டமைப்பாக மாற்றப்பட்டது. அதிகபட்சமாக 40 சதவீத வரி, ஆடம்பர மற்றும் மதுபான பொருள்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அக்கூட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்குவது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டு நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, தில்லியில் வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாதத்துக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வரி வரம்பை மாற்றும் திறன் கொண்ட பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதேபோல், தானியங்கி வரி விதிப்பு மற்றும் ஜிஎஸ்டி பதிவு ரத்து உள்ளிட்டவையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சுமாா் 1.68 கோடி வா்த்தக நிறுவனங்கள், ஜிஎஸ்டியின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளன. தற்போது மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு மேற்கொள்ள ஒரே மாதிரியான நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

GST Council meeting in Delhi on September 12 - Meeting after a year

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments