கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திராவின் ராஜிநாமா ஏற்பு
கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திராவின் ராஜிநாமா ஏற்பு பற்றி...
கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திராவின் ராஜிநாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டுள்ளார்.
முதல்வர் டி. கே. சிவகுமாரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இந்த ராஜிநாமாவை அவர் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதில், " முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்திய அரசியலமைப்பின் 164(1)-வது பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திரா ராஜிநாமாவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்கிறேன்," என்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, சித்தராமையா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் பி.நாகேந்திரா. அப்போது, பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தில் இருந்து ரூ. 187 கோடி சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு, 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்காக செலவிடப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, 2024 ஜூன் 6-ஆம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து பி.நாகேந்திரா விலகினார். இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் 2024 ஜூலை 12-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகேந்திரா, பின்னர் பிணையில் 2024 அக்டோபர் 14-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கர்நாடகத்தின் முதல்வராகப் பதவியேற்ற டி.கே.சிவகுமார், ஆக. 3-ஆம் தேதி தனது அமைச்சரவையை விரிவாக்கிய போது பி.நாகேந்திரா திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக்கப்பட்டார்.
இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பெங்களூரில் முதல்வர் டி.கே.சிவகுமாரை வெள்ளிக்கிழமை சந்தித்த அமைச்சர் பி.நாகேந்திரா, தனது பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, அதற்கான கடிதத்தை அவரிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Karnataka Governor Thaawarchand Gehlot has accepted B Nagendra's resignation as minister, according to an official notification.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.