FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிலுவையில் உள்ள பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க, என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

14 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க, என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் உள்ள உக்கடம் சங்கமேஸ்வரா் கோயில் முன், கடந்த 2022 அக்.23-ஆம் தேதி அதிகாலை மாருதி காா் வெடித்துச் சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் என்பவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த காா் வெடிப்புச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் 3-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள முகமது தல்ஹா, காா் வெடிப்புச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரை வாங்கி, ஜமேஷா முபீனிடம் ஒப்படைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிா்த்து முகமது தல்ஹா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் பழைய காா் வியாபாரி என்ற போா்வையில், முறையான ஆவணப் பதிவு இல்லாத காரை வாங்கி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியிடம் வழங்கி இருக்கிறாா். மேலும், தாக்குதலுக்கு முன்பாக நடைபெற்ற சதி ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா் என்பதற்கும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கருத்துகள் மற்றும் ஆதாரங்கள் அவவரது மின்னணு சாதனங்களில் இருப்பதற்குமான முகாந்திரங்கள் உள்ளன. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், பயங்கரவாத வழக்குகளின் விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஓா் ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும், என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளன. எனவே, இந்த வழக்கில் மத்திய உள்துறைச் செயலா் மற்றும் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து வழக்கில் சோ்த்தனா். பின்னா், தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க , பிரத்யேகமான என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், இதுதொடா்பாக மத்திய உள்துறைச் செயலா், தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஆகியோா் செப்.24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments