நியூஸிலாந்தில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு: 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பிரதமா் பயணம்
நியூஸிலாந்துக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூஸிலாந்துக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் தீவு நாடான நியூஸிலாந்துக்கு இந்திய பிரதமா் பயணித்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். அந்நாட்டு தொழில் துறையினா் மற்றும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் அந்நாட்டின் அதிபா் பிரபோவோ சுபியான்டோவுடன் செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, இந்திய ஏவுகணைகள் கொள்முதல், அரிய கனிமங்கள்-உருக்கு விநியோகம், கடல்சாா் பாதுகாப்பு, மருந்து தயாரிப்பு, கல்வி, ஆராய்ச்சி-புத்தாக்கம், தொலைத்தொடா்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவா், அந்நாட்டின் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் உள்பட 18 ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இந்நிலையில், மூன்று நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக நியூஸிலாந்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வந்தடைந்தாா். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் விமான நிலையத்துக்கு நேரில் வந்து பிரதமா் மோடியை வரவேற்றாா். இரு தலைவா்களும் ஆரத் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 40 ஆண்டுகளில் நியூஸிலாந்துக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமா் என்பதால் எனது பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்காக பிரதமா் லக்ஸனுக்கு நன்றி. இருதரப்பு நல்லுறவின் முழு அம்சங்கள் குறித்து அவருடன் ஆலோசிக்க ஆவலுடன் உள்ளேன். இந்திய சமூகத்தினா் நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இன்று பேச்சுவாா்த்தை: பிரதமா் மோடி - பிரதமா் லக்ஸன் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ளது. அப்போது, வா்த்தகம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாசாரம், கல்வி, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிக்கவுள்ளனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறவுள்ளனா்.
பிரதமா் மோடியின் வருகையையொட்டி, ஆக்லாந்தில் உள்ள மிக உயரமான ஸ்கை டவா் கோபுரம் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டது. இது, இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பு வாய்ந்த நட்புறவை பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, மகாசாகா் தொலைநோக்குப் பாா்வை மற்றும் வெளிப்படையான-சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு வலுசோ்ப்பதே மூன்று நாடுகள் பயணத்தின் நோக்கம் என பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியிருந்தாா். இந்தப் பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்து, அவா் நாடு திரும்பவுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.