கேத்தன் கொலை வழக்கில் தடுமாறும் விசாரணை! சவாலாக மாறும் சாட்சிகள்
புனே தொழிலதிபர் கேத்தன் கொலை வழக்கில் போதிய சாட்சிகள், தடயங்கள் கிடைக்காமல் காவல்துறை திணறி வருவது பற்றி..
மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் பணக்கார தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான சாட்சியங்களைத் திரட்டுவது சவாலாக மாறியிருக்கிறது.
வெறும் சூழ்நிலைகளை மட்டும் சாட்சியங்களாகக் கொண்டு ஒரு தொடர் சங்கிலியை உருவாக்கினாலும், அது நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது.
இதுவரை, ஜூன் 18ஆம் தேதி, கேத்தன் கொலைச் சம்பவம் எப்படி நடந்தது என்பது தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுவிட்டாலும், குற்றத்தை நிரூபிக்க இதுவரை ஒரு முக்கிய சாட்சியம் கூட காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
26 வயது கேத்தன் அகர்வால் கொலை செய்யப்படுகிறார், இதில், அவரது வருங்கால மனைவியான 20 வயது சியா கோயல், 22 வயது சேத்தன் சௌத்ரி கைது செய்யப்படுகிறார்கள். கேத்தன் - சியா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இந்த திருமணத்தில் சியாவுக்கு உடன்பாடு இல்லை. இதனால், காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
குடும்பத்திடம் சொல்வதைவிட..
வழக்கு விசாரணையின்போது, திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூறியிருக்கலாமே என்று காவல்துறை கேட்டதற்கு, பெற்றோரிடம் சொல்வதைவிட, கேத்தனை கொல்வதே எளிதானது என்று தோன்றியதாகக் குறிப்பிட்டுள்ளார் சியா.
கேத்தன் அகர்வாலுக்கு தலைமுடி குறைவாக இருந்ததால், சியாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. அவர் விக் வைத்திருப்பதால் திருமணத்தை நிறுத்துமாறு கூறினால், குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார்,.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வது மட்டும், தண்டனை வழங்கப் போதுமானது அல்ல. குற்றவாளிகளுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள், குற்றம் நடந்ததற்கான சாட்சிகள் நிச்சயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
காவல்துறை தாக்கல் செய்யும் சாட்சியங்களும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால், உயர்ந்த மலைப் பகுதியில், சிசிடிவி இல்லாத இடத்தில், கொலை நடந்திருக்கும் நிலையில், போதுமான சாட்சியங்களைத் திரட்டுவது என்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
நேரடியாகப் பார்த்தவர்களோ, தடய அறிவியல் ஆதாரங்களோ காவல்துறையால் அளிக்கப்பட வேண்டும். செல்போனில் பதிவான ஆடியோ, சிசிடிவி காட்சிகள், குற்றவாளிகள் இருந்த இடத்தை உறுதி செய்யும் பதிவு, தொலைத்தொடர்பு பதிவு, துணிகள் போன்று எதுவாகவும் இருக்கலாம்.
பொதுவாக பலமான சாட்சியங்கள் இருந்தாலே, நீதிமன்றங்கள் பல கேள்விகளை எழுப்பும் நிலையில், சாட்சிகள்தான் கேத்தன் கொலையில் பெரும் சவாலாக மாறியிருக்கின்றன என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.