புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?
புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பமாக கொலைத் திட்டத்தை தீட்டியது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புணேவில், இளம் பணக்கார தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கு விசாரணையில், திடீர் திருப்பமாக, இரண்டு குற்றவாளிகளும், கொலையை திட்டமிட்டதாக ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 18ஆம் தேதி கேத்தன் கொலையில் அவரது வருங்கால மனைவி சியா கோயல், காதலனுடன் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது, கேத்தனைக் கொலை செய்ய காதலன் சேத்தன்தான் திட்டமிட்டதாக சியா கோயலும், கேத்தனைக் கொலை செய்யுமாறு சியாதான் தன்னை வற்புறுத்தியதகாவும் சேத்தனும் கூறியிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
மேலும், இந்த திருமணம் வேண்டாம் என தான் பல முறை கேத்தனிடம் வலியுறுத்தியும, திருமணத்தை நிறுத்த அவர் மறுத்துவிட்டார் என்றும் சியா கூறுகிறார். இதையடுத்தே கேத்தனை கொன்றுவிடலாம் என்று சேத்தன் யோசனை சொன்னதாக சியா கூற, கேத்தனைக் கொலை செய்துவிடலாம் என சியாதான் தன்னை வற்புறுத்தியதாக சேத்தன் கூறியிருக்கிறார்.
காவல்துறை இதுவரை நடத்தி திரட்டியிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், சியா கோயல்தான், இந்த கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இளம் தொழிலதிபர் கேத்தன் - சியா நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரியல் நடந்துள்ளது, இந்த ஆண்டு இறுதியில் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
எனினும், இவ்வளவு சீக்கிரம் திருமணத்தில் நுழைய சியா கோயலுக்கு விருப்பமில்லை என்றும், குடும்பத்தினர் வற்புறுத்தலால் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாகவும், சேத்தனுடன் பழகினாலும், அவரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் அவர் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த கொலைச் சம்பவத்தில் சியா கோயல் உண்மையான குற்றவாளியாக இருந்தால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோரே வலியுறுத்தியிருக்கிறார்கள்.
திருமணம் என்று பேசும்போது, சியா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. சேத்தன் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. கேத்தனை தள்ளி விட்ட மலையிலிருந்தே, குற்றவாளிகளையும் தள்ளிக் கொலை செய்ய வேண்டும் என்று சியாவின் தந்தை வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எங்கள் விருப்பப்படி நாங்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்ய எங்கள் மகன் ஒப்புக் கொண்டதைத் தவிர வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. நாட்டின் சட்டத்தை நம்புகிறோம் என்று கண்ணீர் விடுகிறார் கேத்தன் தாய்.
கொலை நடந்தது எப்படி?
ஜூன் 18ஆம் தேதி லோஹாகட் கோட்டைக்குச் சென்றபோது, 400 அடி பள்ளத்தில் தள்ளி கேத்தன் அகர்வால் கொலை செய்யப்பட்டார். முதலில் இது விபத்து என்றே கருதப்பட்டது.
முதற்கட்ட விசாரணை, சிசிடிவி காட்சிகள், போன் அழைப்புகள் போன்றவற்றை ஆராய்ந்த போதுதான் இது திட்டமிட்டக் கொலை என்று தெரிய வந்தது. சியா, சேத்தன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முதலில், சியா - சேத்தன் இருவருக்கும் இடையேயான எண்ணற்ற போன் கால்கள்தான் இவர்கள் மீது சந்தேகம் வர முதல் காரணம். ஜனவரி முதல் இவர்கள் 2000 முறை போனில் பேசியிருக்கிறார்கள.
அதில்லாமல், சம்பவத்தன்று, கடுமையான வெய்யில் பகுதிக்கு, சேத்தன் ஹூடி அணிந்துகொண்டு முகத்தை மறைக்கும்படி வந்ததும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொலை செய்வதற்கு முன்பு, சியா - சேத்தன் இருவரும் இந்தக் கோட்டைக்கு பல முறை வந்து சென்றிருக்கிறார்கள். சம்பவத்தின்போது சேத்தன், தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னுடைய செல்போனை அறையிலேயே வைத்திருக்கிறார்.
Sudden twist in the death of a young Pune entrepreneur!! Who hatched the murder plot?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.