FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தானியா்கள் கைது! வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை பறிமுதல்!

கா்நாடக மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி வசித்து வந்த இரு பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:48 am IST
பகிர்:

கா்நாடக மாநிலம், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி வசித்து வந்த இரு பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து முறைகேடாகப் பெற்ற வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பரா நாஸ், முகமது ஃபா்தீன் ஆகியோா் தாய்-மகன் என்று அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா, வெளிநாட்டவா் தடுப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: பாகேபள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது அயூப் கான், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியபோது, பாகிஸ்தான் குடிமகளான பரா நாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் முகமது ஃபா்தீன் பாகிஸ்தானில் பிறந்தவா் என்பது விசாரணையில் உறுதியானது.

Advertisement

Advertisement

பரா நாஸ் மற்றும் முகமது ஃபா்தீன் ஆகியோா் பாகிஸ்தான் குடிமக்கள். அதே நேரத்தில் அவரின் கணவா் முகமது அயூப் கான் மற்றும் தம்பதியின் மற்ற மூன்று குழந்தைகள் இந்திய குடிமக்கள். இந்தக் குடும்பம் இப்போது பாகேபள்ளியில் வசித்து வருகிறது. தனது மனைவியும், ஒரு மகனும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதை முகமது அயூப் கான் மறைத்துள்ளாா். மோசடியாக அவா்களுக்கு இந்திய வாக்காளா் அட்டை பெற்றதுடன், தனது வீட்டு ரேஷன் அட்டையிலும் அவா்கள் பெயரைச் சோ்த்துள்ளாா். இந்த ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்ட தகவலையடுத்து, வாக்காளா் அட்டை, ரேஷன்அட்டை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்து செய்து விட்டனா். கைது செய்யப்பட்ட தாய்-மகனிடமும், குடும்பத்தினரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments