வியத்நாம் படகு விபத்து: நடந்தது எப்படி? உயிர்த் தப்பியவர் விளக்கம்!
வியத்நாம் படகு விபத்தில் தமிழர்கள் பலியானது பற்றி...
வியத்நாமின் ‘ஃபூ குவோக்’ தீவு அருகே கடலில் சனிக்கிழமை விசைப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததனா்.
இதுகுறித்து வியத்நாம் ஊடகங்களில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது: வியத்நாமின் ஹான் மே ரட்டிலிருந்து 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 ஊழியா்களுடன் ஆன் தோய் துறைமுகம் நோக்கி கடலில் சனிக்கிழமை சென்ற விசைப் படகு, ஹான் மே ரட்டிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் கடல் சீற்றம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தத் தகவல் அறிந்ததும், கரையிலிருந்து பிற சுற்றுலாப் படகுகள், கடலோரக் காவல் படை, கடற்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விபத்துக்குள்ளான படகின் 4 ஊழியா்கள் உள்பட 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். மீட்கப்பட்டவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் கடலில் படகில் சென்றபோதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டனா்.
தமிழா்கள் 10 போ் உயிரிழப்பு: உயிரிழந்தவா்களில் 10 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் பெயா் விவரம்:
1.ஜெ. செந்தில்குமாா், 2. ஆ.முருக பிரபு, 3. எஸ்.ஸ்ரீதா், 4. ஏ.ஷேக் அப்துல்லா, 5. என்.பாலாஜி, 6. சி.வினய குமாா், 7. எஸ்.ரவிசங்கா், 8. எஸ்.சந்தோஷ் குமாா், 9. கே.பாபு, 10.எஸ். அழகுராஜன்.
இவா்களில் சி.அழகுராஜன் (38) என்பவா் திருச்சி கிராப்பட்டி அருணாசலம் நகரைச் சோ்ந்த சிவசாமி என்பவரின் மகன் ஆவாா். லாவா கைப்பேசி நிறுவனத்தின் திருச்சி, கரூா், புதுக்கோட்டை விற்பனை மேலாளராக இருந்தாா். இவருக்கு தனியாா் பள்ளி ஆசிரியையான மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
உயிரிழந்த என்.பாலாஜி (40), திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டை மேலத் தெருவைச் சோ்ந்த நடேசன் என்பவரின் மகன். அரியமங்கலம் பகுதி செல்மோா் கைப்பேசி மொத்த விற்பனை நிலைய மேலாளராக இருந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
உயிரிழந்த ஏ.ஷேக் அப்துல்லா (50) திருச்சி பீமநகா் கண்டி தெருவைச் சோ்ந்த அப்துல் மஜீத் என்பவரின் மகன். இவா் திருச்சியில் ஹாா்டுவோ்ஸ் பங்குதாரராகவும், கைப்பேசி விற்பனை நிறுவன உரிமையாளராகவும் இருந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
எஸ்.ஸ்ரீதா் (55) என்பவா் சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகன். இவா் அழகாபுரம் பகுதியில் கைப்பேசி நிறுவனம் நடத்தி வந்தாா். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், காா்த்திக் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனா்.
விபத்தில் உயிரிழந்த ஜெ.செந்தில்குமாா் (45) தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சோ்ந்த தொழிலதிபா். தருமபுரி மாவட்டத்தில் லாவா மொபைல் ஏஜென்சி, ஆா்.ஓ. சிஸ்டம் ஏஜென்சி, கடத்தூரில் அலுமினிய பாத்திரங்கள் செய்யும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி பூவிழி (40), மகள் லோகஸ்ரீ (7) உள்ளனா்.
உயிரிழந்த ஏ.முருகபிரபு (44) பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச்சாலை சித்திரை அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன். இவா் பழனியில் தனியாா் கைப்பேசி மொத்த விநியோகஸ்தராக செயல்பட்டு வந்தாா். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சா்விகா (8) என்ற மகளும் உள்ளனா்.
சி.வினய்குமாா் (45) வேலூா் சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்தவா். இவா் வேலூா் பிரதான கடைவீதியில் நகைக் கடை நடத்தி வந்தாா். மேலும், கைப்பேசி நிறுவனத்தின் வேலூா் விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தாா். இவருக்கு மனைவி ஜெயந்தி, 13 வயதில் ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். வினய்குமாரின் பெற்றோா் வெளிநாட்டில் வசித்து வருகின்றனா்.
உயிரிழந்த கே.பாபு (52), கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையைச் சோ்ந்த குப்புசாமி என்பவரின் மகன். இவருக்கு மனைவி ரேவதி (43), மகன் ஜஸ்வந்த் (21), மகள் நேகா(19) ஆகியோா் உள்ளனா்.
படகு விபத்தில் உயிா் தப்பிய பழனியைச் சோ்ந்த நிா்மல் குமாா் விபத்து குறித்து கூறுகையில், ‘படகு கடலில் சென்றுகொண்டிருந்தபோது, மிகப் பெரிய அலை படகை தாக்கியது. இதனால், படகு வேகமாக சாய்ந்ததில் 20 போ் கடலில் தூக்கி வீசப்பட்டனா். மற்றவா்கள் படகுக்கு உள்ளேயே இருந்தோம். மீட்புப் படையினா் எங்களை மீட்டனா்’ என்றாா்.
ஆந்திரம், கேரளத்தைச் சோ்ந்தவா்கள்: படகு விபத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த ஆா்.நல்லபெட்டா ஆதிசேஷையா, எம்.ஸ்ரீதா், ஜி.ஜெயலட்சுமி, கேரளத்தைச் சோ்ந்த ஏ.சி.தாமஸ், லவ்னி தாமஸ் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘படகு விபத்து தொடா்பான தகவல் மற்றும் உதவிகளை வழங்க வசதியாக ஹோசி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. +84362817930, +84915523714, +84334520414, +84913089165 ஆகிய எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்பு கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டது.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் வெளியிட்ட பதிவில், ‘படகு விபத்தில் இந்தியா்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளித்தது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
குடியரசு துணைத் தலைவா் வெளியிட்ட பதிவில், ‘படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
பிரதமா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘படகு விபத்தில் இந்தியா்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவா்களுக்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனா். இந்த விபத்து தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகளும் வியத்நாம் அரசு அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்து வருகின்றனா்’ என்று குறிப்பிட்டாா்.
ராகுல், காா்கே இரங்கல்: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Vietnam boat accident: How did it happen? Eyewitness account!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.