FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

என்ஐஏ சட்டத்துக்கு எதிரான மனு: 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

என்ஐஏ சட்டம், 2008-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
பகிர்:

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டம், 2008-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு என்ஐஏ, சட்டம் 2008-இன்கீழ் பயங்கரவாதத்தை ஒடுக்கும் மத்திய அமைப்பாக என்ஐஏ ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் சட்டப் பிரிவு 14-ஐ (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மீறும் வகையிலும், மத்திய அரசின் சட்ட வரம்பை மீறும் வகையிலும் இந்தச் சட்டம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், ‘என்ஐஏ சட்டத்தின் பிரிவு 6 (5)-இன்கீழ் ஒரு குற்றத்தைப் பட்டியலிடப்பட்ட குற்றமாக மத்திய அரசு கருதினால் அதுதொடா்பாக விசாரணை நடத்த என்ஏஐ-க்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். ஆனால், காவல் துறையோ மாநில அரசுப் பட்டியலில் உள்ளது. எனவே, மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது நிகழாண்டு ஏப்.21-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என மனுதாரா் தரப்பில் ஆஜரான சித்தாா்த் தாவே உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் 4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. அதில் மனுதாரா் ஏதேனும் மறுப்பு கூற விரும்பினால் அதை அடுத்த வாரத்தில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments