ரயிலில் தாலி திருட்டு! பயணிக்கு ரூ. 80,000 நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!
ரயிலில் நகையைப் பறிகொடுத்த பயணிக்கு நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி...
ராஜ்தானி விரைவு ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பயணியிடம் இருந்து தாலி திருடப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 80,000 நஷ்டஈடு வழங்க வடக்கு ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருட்டு நடந்தபோது ரயில் ஊழியர் (அட்டெண்டன்ட்) யாரும் பணியில் இல்லாததால், ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு உறுதி செய்யப்படுவதாக பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாய ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
திருட்டு நடந்தது எப்படி?
Advertisement
Advertisement
கடந்த 2021, டிசம்பர் 14 அன்று, கல்லு ராம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தில்லிக்கு ராஜ்தானி விரைவு ரயிலில் 3 ஏசி பெட்டியில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களின் பேக் திருடப்பட்டுள்ளது. அதில், 15 கிராம் தங்கத் தாலிச் சங்கிலி, ரூ. 5,000 பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது. பண்டித் தீன தயாள் உபாத்யாய் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தபோது திருடு குறித்து புகார் அளித்துள்ளனர்.
கல்லு ராம் அளித்த புகாரில், திருட்டு நடந்ததை அறிந்தவுடன் ரயில் பெட்டிப் பணியாளரைத் தேடியதாகவும், ஆனால் அவர் பெட்டியில் இல்லாததால், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி மற்றும் பயணச் சீட்டு பரிசோதகர் ஆகியோரிடம் தகவல் கொடுத்ததாக தெரிவித்தார்.
தில்லியை அடைந்த பிறகு, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், பதான்கோட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ரயில்வேக்கு அபராதம் ஏன்?
இந்த புகாரை எதிர்த்து வாதிட்ட ரயில்வே நிர்வாகம், திருட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவித்தது. மேலும், முன்பதிவு செய்யப்படாத உடைமைகளுக்கு ரயில்வே நிர்வாகத்தைப் பொறுப்பாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்டியது.
ஆனால், பயணத்தின்போதே ரயில்வே பாதுகாப்புப் படை காவலரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்திருந்ததால், ரயில்வே நிர்வாகத்தின் வாதத்தை ஆணையம் நிராகரித்தது.
மேலும், திருட்டு நடந்தபோது பெட்டிப் பொறுப்பாளர் (coach attendant) யாரும் அங்கு இல்லை என்ற பயணியின் கூற்றை ரயில்வே மறுக்கவில்லை என்பதையும், அவர் பணியில் இருந்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் ரயில்வே சமர்ப்பிக்கவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து, திருடப்பட்ட பொருள்களுக்காக ரூ. 70,000-ம், வழக்குத் தொடரப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் தேதி வரை ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியையும் வழங்குமாறு வடக்கு ரயில்வேக்கு ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர் எதிர்கொண்ட மன உளைச்சலுக்காகக் கூடுதலாக ரூ. 10,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
உத்தரவின் நகலைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் ரயில்வே நிர்வாகம் இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், வழக்குத் தொடரப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு, மொத்தத் தொகைக்கும் ஆண்டுக்கு 12 சதவிகிதம் என்ற கூடுதல் வட்டி விகிதத்தைச் செலுத்த நேரிடும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thali stolen on train - Railways ordered to pay rs 80,000 compensation to passenger
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.