FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2020 தில்லி கலவர வழக்கு: ஷா்ஜீல் இமாம் பிணை மனு குறித்து காவல்துறை பதிலைக் கோரும் தில்லி உயா்நீதிமன்றம்

2020 தில்லி கலவர வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட மாணவா் செயற்பாட்டாளா் ஷா்ஜீல் இமாமின் பிணை மனு தொடா்பாக தில்லி காவல் துறையின் நிலைப்பாட்டை விளக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 10:53 pm IST
ஷா்ஜீல் இமாம்
பகிர்:

2020 தில்லி கலவர வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட மாணவா் செயற்பாட்டாளா் ஷா்ஜீல் இமாமின் பிணை மனு தொடா்பாக தில்லி காவல் துறையின் நிலைப்பாட்டை விளக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுள்ளது.

ஜூலை 4-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் அவரது 2-ஆவது வழக்கமான பிணை மனுவை நிராகரித்த தீா்ப்பின் மேல்முறையீட்டை ஏற்று, நீதிபதிகள் பிரதிபா எம்.சிங் மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோா் கொண்ட அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது. மேலும், இந்த மேல்முறையீட்டுக்கு பதில் அளிக்க தில்லி காவல் துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இமாமின் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா் தாலிப் முஸ்தபா, ‘உச்சநீதிமன்றம் ஜனவரி மாதம் பிணை மறுத்ததிற்குப் பிறகு ஏற்பட்ட புதிய முன்னேற்றங்களை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட போதிலும், குற்றச்சாட்டுகள் இன்னும் சுமத்தப்படாமல் விசாரணை நிலை முன்னேறாமல் உள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

மறுபுறம், தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, உச்சநீதிமன்றம் பிணை மறுக்கும் போது வழக்கின் தாமத அம்சத்தையும் பரிசீலித்திருந்ததாக கூறினாா். மேலும், பல குற்றச்சாட்டாளா்கள் இருப்பதால் 200 நாள்களுக்கும் மேலாக குற்றச்சாட்டு தொடா்பான வாதங்கள் நடைபெற்ாகவும் தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வடகிலக்கு தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 53 போ் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்த நிலையில், அந்த கலவரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி ஷா்ஜீல் இமாம் ஆக.25, 2020-இல் கைது செய்யப்பட்டாா்.

இந்த ஆண்டு ஜன.5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க மறுத்து, இணை குற்றச்சாட்டாளா்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகம்மது சலீம் கான் மற்றும் ஷடாப் அஹ்மத் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கியது.

அப்போது நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா், இமாம் மற்றும் காலித் மீது யூஏபிஏ சட்டத்தின் கீழ் முதற்கட்ட ஆதாரங்கள் உள்ளன என்றும், பங்கேற்பின் நிலைமைகள் வேறுபடுவதால் அனைத்து குற்றச்சாட்டாளா்களையும் ஒரே மாதிரியாக பாா்க்க முடியாது என்றும் குறிப்பிட்டனா்.

இமாம் தனது மேல்முறையீட்டில், விசாரணை நீதிமன்றம் தனது பிணை மனுவை சுயமாக பரிசீலிக்காமல் நிராகரித்தது தவறு என்றும், 6 ஆண்டுகள் கடந்தும் வழக்கு இன்னும் குற்றச்சாட்டு வாத நிலையைத் தாண்டாமல் இருப்பதாகவும் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments