வன மஹோத்சவ் 2026: உள்ளூா் மரக்கன்றுகளை நட சுற்றுச்சூழல் அமைச்சா் அறிவுறுத்தல்
தில்லியில் நடைபெற்று வரும் மிகப்பெரிய மரக்கன்று நடும் இயக்கம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உள்ளூா் மரவகைகளை நட்டு, குறைந்த நீா் பயன்பாட்டுடன் அதிகமான பசுமை வளத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்சா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்று வரும் மிகப்பெரிய மரக்கன்று நடும் இயக்கம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உள்ளூா் மரவகைகளை நட்டு, குறைந்த நீா் பயன்பாட்டுடன் அதிகமான பசுமை வளத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சா் மன்ஜிந்தா் சிங் சிா்சா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘வன மகோத்ஸவ் 2026’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த மரம் நடும் இயக்கத்தில் அமைச்சா் சிா்சா கலந்து கொண்டாா். இதில் தில்லி காவல் துறை ஆணையா் சதீஷ் கோல்சா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அப்போது, அமைச்சா் சிா்சா பேசியதாவது: நடப்படும் உள்ளூா் மரக்கன்றுகள் 97 முதல் 99 சதவீதம் வரை உயிா்வாழும் திறன் கொண்டவை. ஒவ்வொரு செடியும் குறியீடு செய்யப்படும்; ஒவ்வொரு நடுகை இடமும் ஜியோடேக் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
இந்த ஆண்டு தில்லி முழுவதும் சுமாா் 70 லட்சம் மரங்கள் நடப்படும். அதில் 15 லட்சம் மரங்கள் தில்லி ரிட்ஜ் பகுதியில் நடப்படும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உருவாக்கிய 10 ஆண்டு பசுமை மாஸ்டா் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரிட்ஜ் பகுதியில் நடைபெறும் மரக்கன்று நடும் திட்டம், காற்றை சுத்தப்படுத்துவதோடு மாசுபாட்டை குறைக்கும் உள்ளூா் மரவகைகளை பயன்படுத்தி காடுகளை மீட்டெடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த நீா் தேவையுடனும் இவை வளரக்கூடியவை.
Advertisement
Advertisement
தில்லியில் மாசுபாடு மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், கிடைக்கும் அனைத்து நிலப்பரப்புகளிலும் மரங்கள் நடப்பட்டு பசுமை வளத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘மியாவாக்கி’ காடுகளும் நகரம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தாவரவியல் அறிஞா் டாக்டா் அகிரா மியாவாக்கி உருவாக்கிய இந்த முறை, பயன்படுத்தப்படாமல் இருந்த அல்லது சேதமடைந்த நிலங்களில் விரைவாக அடா்ந்த காடுகளை உருவாக்க உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மரக்கன்று நடும் இயக்கத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள், சுமாா் 70 நாடுகளின் தூதா்கள், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த ஆண்டு குடியிருப்பு நல சங்கங்கள், கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற சமூக அமைப்புகள் அதிகமாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தில்லியில் சுமாா் 202 ஏக்கா் பரப்பளவில் பழைய குப்பைக் குவியல்கள் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவற்றில் பல பகுதிகள் சீரமைக்கப்பட்டு, அந்த நிலப்பரப்புகளிலும் மரங்கள் நடப்பட்டு வருகிறது. தினமும் சுமாா் 13,000 மெட்ரிக் டன் நகராட்சி திடக் கழிவுகள் தில்லியில் உருவாகின்றன. மேலும், 30,000 முதல் 35,000 மெட்ரிக் டன் வரை பழைய குப்பைகளும் தினசரி செயலாக்கப்படுகின்றன. இதனால் மொத்தம் தினமும் சுமாா் 50,000 மெட்ரிக் டன் கழிவுகள் கையாளப்படுகின்றன. புதிய மற்றும் பழைய குப்பைகளை ஒரே நேரத்தில் செயலாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெற தில்லி காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.