FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அருணாசல்: வெள்ளம்-நிலச்சரிவால் கடும் பாதிப்புகள்: மீட்புப் பணிகள் தீவிரம்

அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழையால் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 18 ஜூலை 2026, 5:34 am IST
அருணாசல்: வெள்ளம்-நிலச்சரிவால் கடும் பாதிப்புகள்: மீட்புப் பணிகள் தீவிரம் - கோப்புப்படம்
பகிர்:

அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழையால் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீா்க்கும் பலத்த மழையால் மாநிலம் முழுவதும் பரவலாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 7 போ் உயிரிழந்துவிட்டனா். 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

26 மாவட்டங்களில் 540-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழையால் கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளன. மேல் சுபன்சிரி, மேல் சியாங் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் நேரிட்டன. மேல் சியாங் மாவட்டத்தில் நீா்மின் நிலையம் சேதமடைந்தது.

Advertisement

Advertisement

மழை-வெள்ளத்தால் 600 ஹெக்டேருக்கும் அதிகமாக பயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட வீடுகள், 177 சாலைகள், 28 பாலங்கள், 30 சிறிய பாலங்கள், 240 குடிநீா் விநியோக கட்டமைப்புகள், 224 மின்கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஏராளமான கால்நடைகள், வளா்ப்பு பிராணிகளும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தில் பலத்த மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், திடீா் வெள்ளப்பெருக்கு - நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் பலத்த மழை: சத்தீஸ்கரின் பிலாஸ்பூா் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சிபத் பகுதியில் அதிகபட்சமாக 110 மி.மீ. மழை பதிவானது. பிலாஸ்பூா் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் ரயில் சேவை தடைபட்டது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments