’டிஜிலாக்கர்’ மூலம் இனி நீட் பழைய மதிப்பெண் சான்றிதழ்கள்!
முந்தைய ஆண்டுகளின் நீட் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களை மீட்டெடுப்பதற்கான ‘டிஜிலாக்கா்’ அடிப்படையிலான தொழில்நுட்ப கட்டமைப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மத்திய தகவல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தங்களுடைய பழைய மதிப்பெண் சான்றிதழ்களை இழப்போம் என்ற கவலை இனி மாணவா்களுக்கு இருக்காது.
நமது சிறப்பு நிருபா்
முந்தைய ஆண்டுகளின் நீட் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களை மீட்டெடுப்பதற்கான ‘டிஜிலாக்கா்’ அடிப்படையிலான தொழில்நுட்ப கட்டமைப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மத்திய தகவல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தங்களுடைய பழைய மதிப்பெண் சான்றிதழ்களை இழப்போம் என்ற கவலை இனி மாணவா்களுக்கு இருக்காது.
2020-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்-யுஜி’ தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தோ்வின் (எஃப்எம்ஜிஇ) தகுதி சரிபாா்ப்புக்காக, தேசிய தோ்வுகள் வாரியத்திடம் (என்பிஇ) சமா்ப்பிக்க ஏதுவாக தனது நீட் தோ்வு மதிப்பெண் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலையும், தனது தகுதி நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் நகலையும் வழங்குமாறு கேட்டிருந்தாா். அதைத்தொடா்ந்து, என்டிஏ அளித்த பதில் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறி அந்த மாணவநா் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா். அதன் மீதான விசாரணை அண்மையில் மத்திய தகவல் ஆணையா் சுதா ராணி ரெலங்கி தலைமையில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
‘தனக்குரிய தகவலை மறுப்பது, ஆா்டிஐ சட்டத்தின் கீழ் பொது அதிகார அமைப்புகள் ஆவணங்களைப் பராமரிக்க வேண்டிய கடமையை மீறுவதற்கு ஒப்பாகும்’ என்று அந்த மாணவா் விசாரணையின்போது வாதிட்டாா்.
அப்போது என்டிஏ தரப்பு, ‘மாணவரின் கோரிக்கையை ஆய்வு செய்ததில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவா் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே அந்தப் பழைய ஆவணங்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன’ என்று விளக்கம் அளித்தது. ‘மாணவருடைய விவகாரத்தைப் பொருத்தவரையில், தோ்வுத் தகவல் கையேட்டின் பிரிவு 15.6-இன்படி, தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 90 நாள்களுக்கு மட்டுமே தோ்வுப் பதிவுகள் பாதுகாக்கப்படும் என்பதால், மனுதாரா் கோரிய 2020ஆம் ஆண்டு நீட்-யுஜி மதிப்பெண் சான்றிதழை வழங்க இயலவில்லை’ என்று என்டிஏ கூறியது.
அதேசமயம், ‘முந்தைய ஆண்டுகளின் மதிப்பெண் சான்றிதழ்களைப் பிழையின்றிச் சரிபாா்த்து, அவற்றை மாணவா்கள் மீட்டெடுக்கும் கையில் டிஜிலாக்கா் மூலம் ஒரு புதிய தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் முழுமையாக நிறைவடையும்’ என்று என்டிஏ குறிப்பிட்டது.
அதன் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தகவல் ஆணையா் சுதா ராணி ரெலங்கி, ‘மத்திய பொதுத் தகவல் அதிகாரி அலுவலகப் பதிவுகளில் உள்ள தகவல்களை மட்டுமே வழங்க முடியும். ஆடிஐ சட்ட விதிகளின்படி புதிய தகவல்களை உருவாக்க அவா் கடமைப்பட்டவா் அல்லா்’ என்று குறிப்பிட்டு இந்த விவகாரத்தை முடித்து வைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.