FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்கள்.

Updated On : 23 ஜூலை 2026, 6:03 am IST
நாடாளுமன்றம்
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் வருமாறு...

1) வாங்கும், நுகரும் திறனில் இடைவெளி உள்ளதா?

இது தொடர்பாக மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "மாநிலங்களுக்கு இடையே நுகர்வுச் செலவு மற்றும் வாங்கும் திறனில் உள்ள வித்தியாசம் குறித்து புள்ளியியல் அமைச்சகம் தனியாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. இருப்பினும், குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வின் (2022-23 மற்றும் 2023-24) சராசரி நுகர்வு விவரங்கள் தனியாகப் பராமரிக்கப்படுகின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற அளவிலான நுகர்வுத் தரவுகள் மாநில அரசுகளின் ஒப்பீட்டு ஆய்வுக்கு மட்டுமே பயன்படுகின்றன' என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

2) செமிகண்டக்டர் உற்பத்தி நிலை என்ன?

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், "தமிழகத்தில் 61 கல்வி நிறுவனங்களில் திறன் மேம்பாடு மற்றும் 7 செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளித்துள்ளது. மணல்லூர் (ரூ. 587.47 கோடி), பிள்ளைப்பாக்கம் (ரூ.424.55 கோடி) தொழில் பூங்காக்கள் உள்பட காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி என 9 மாவட்டங்களில் மின்னணு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன' எனக் கூறியுள்ளார்.

3) உயர்கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கப்படுமா?

எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் அளித்துள்ள பதிலில், "தமிழகத்தில் 2014-15-இல் 33.53 லட்சம் ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை, 2023-24-இல் 35.77 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் மொத்த சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) 44.6 சதவீதத்திலிருந்து 52.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால், தேவை அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் தொடர் நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

4) எல்ஐசி உரிமைகோரா நிதி என்ன ஆனது?

டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் செüத்ரி அளித்துள்ள பதிலில், "எல்ஐசி-யில் உரிமை கோரப்படாத ஆயுள் காப்பீட்டுத் தொகை ரூ. 5,564.55 கோடி மற்றும் அதன் வட்டி ரூ.1,753.95 கோடி என மொத்தம் ரூ.7,318.50 கோடி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(இபிஎஃப்) கணக்குகளில் உரிமை கோரப்படாத நிதி எதுவும் இல்லை; ஆனால், செயல்படாத கணக்குகளில் ரூ. 9,330.56 கோடி முடங்கியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

5) சிறுபான்மையினர் திட்ட நிதி நிலவரம் என்ன?

ஆர்.சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்துள்ள பதிலில், "பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் என்ற சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி திட்டத்தில் தமிழகத்துக்கு 2024-25இல் ரூ. 70.13 கோடியும், 2025-26இல் ரூ. 137.46 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படாததால், நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை' எனக் கூறியுள்ளார்.

6) திருவள்ளூரில் அம்ருத் திட்ட நிலை என்ன?

சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், "சென்னை - திருவள்ளூர் - அரக்கோணம் இடையே 5 மற்றும்

6-ஆவது வழித்தடங்களுக்கான (68 கி.மீ.) இறுதிக் கட்ட ஆய்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தின்கீழ் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களை வேகமான முறையில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன' எனக் கூறியுள்ளார்.

7) ரயில்வே கேட்டரிங் உருளை விலை அதிகரிப்பா?

கே.இ.பிரகாஷ் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு, ரயில்வே அமைச்சர் அளித்துள்ள பதிலில், "ரயில் உணவகப் பெட்டிகளில் சுடரில்லா (ஃப்ளேம்லெஸ்) சமையல் முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி உருளைகளின் தேவை நாள் ஒன்றுக்கு 1,111-இல் இருந்து 458 ஆகக் குறைந்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன' என்று கூறியுள்ளார்.

8) "கவச்' பாதுகாப்பு விரிவாக்க நிலை என்ன?

டாக்டர் ராணி ஸ்ரீகுமார், ஜி.செல்வம், சி.என்.அண்ணாதுரை (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், "ரயில் விபத்துகளைத் தடுக்கும் "கவச்' சாதனம், தமிழகத்தில் 427 கி.மீ. தொலைவுக்குப் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் தமிழகத்தின் வழியாகச் செல்லும் 1,319 கி.மீ. தொலைவிலான பாதைகளுக்கு "கவச்' திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில்.....

1) நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கை?

அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில், "தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 1,716 விபத்து நிகழும் பகுதிகள் (பிளாக் ஸ்பாட்ஸ்) கண்டறியப்பட்டு குறுகிய கால தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 1,298 இடங்களில் நீண்டகால சீரமைப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 732 இடங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன' என்று கூறியுள்ளார்.

2) கல்வி உதவித்தொகை வழங்கலில் மத்திய பங்களிப்பு என்ன?

எம்.தனபால் (அதிமுக) எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அளித்துள்ள பதிலில், "பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நேரடியாக மாநில அரசுகள் அல்லது பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்குவதற்கு தனிப்பட்ட விதிகள் எதுவும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

3) அம்ருத் 2.0 திட்ட நிதியுதவி வழங்கப்பட்டதா?

ஆர்.கிரிராஜன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் தோகன் சாஹு அளித்துள்ள பதிலில், "அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ்,

தமிழகத்தில் உள்ள 604 உள்ளாட்சி அமைப்புகளில் ரூ. 14,766.67 கோடி மதிப்பில் 1,263 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 206 குடிநீர் திட்டங்கள், 29 கழிவுநீர் மேலாண்மை மற்றும் 467 நீர்நிலைப் புனரமைப்புத் திட்டங்கள் அடங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments