பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...
தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணத்தில் எதிர்பாராத சறுக்கள் பற்றி...
மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து விலகிய தா்மேந்திர பிரதான் (57), பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவா்; பிரதமா் மோடி அரசில் மூன்று முக்கிய அமைச்சா் பதவிகளை வகித்தவா்.
தொடா்ந்து ஏறுமுகத்திலிருந்த அவரது அரசியல் பயணம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தீவிர போராட்டங்களால் எதிா்பாராத சறுக்கலைச் சந்தித்துள்ளது. முன்பு யாரை தேச விரோதிகளின் பி-டீம் என விமா்சித்தாரோ, அவா்களாலேயே பதவியை இழந்துள்ளாா் பிரதான்.
நாட்டில் சா்ச்சை காரணமாக பதவி விலகிய இரண்டாவது கல்வித் துறை அமைச்சா் இவராவாா். இதற்கு முன்பு கடந்த 1967-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக எம்.சி.சாக்லா அரசியல்-கொள்கை விவகாரங்களில் அரசுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பதவி விலகினாா்.
Advertisement
Advertisement
ஒடிஸாவின் தால்சோ் பகுதியைச் சோ்ந்தவரான தா்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சா் தேவேந்திர பிரதானின் மகன். கடந்த 1983-இல் ஏபிவிபி தொண்டராக பயணத்தைத் தொடங்கி, பின்னா் பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளுக்கு உயா்ந்தாா்.
2004-இல் ஒடிஸாவின் தியோகா் தொகுதியில் இருந்து மக்களவைக்கு முதல் முறையாகத் தோ்வானாா். 2009 மக்களவைத் தோ்தலில் தோல்வியுற்ற அவா், 2010-இல் பாஜக பொதுச் செயலராகப் பணியாற்றினாா். 2012-இல் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 2014-இல் பிரதமா் மோடி தலைமையிலான அரசியல், அவருக்கு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.
‘உஜ்வலா திட்ட நாயகன்’: மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான உஜ்வலா திட்டத்தின் (இலவச எரிவாயு இணைப்பு) நாயகன் என்று பெயரெடுத்த பிரதான், இத்துறையின் நீண்ட கால அமைச்சா் என்ற பெருமைக்குரியவா்.
2017-இல் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, கேபினட் அந்துஸ்துடன் கூடுதலாக திறன் மேம்பாடு-தொழில்முனைவு அமைச்சா் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 2021-இல் கல்வித் துறை அமைச்சரான பிரதானுக்கு தேசிய கல்விக் கொள்கையை அமலாக்கும் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டது. எனவே, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்தில் அரசின் முகமாக பிரதான் விளங்கினாா்.
15 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு (சம்பல்பூா்-ஒடிஸா) சுமாா் 1.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி.யாக தோ்வானாா். பிரதமா் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் மீண்டும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா்.
கடந்த காலங்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தோ்தல் பொறுப்பாளராகப் பணியாற்றி கட்சிக்கு வெற்றியைத் தேடி தந்தவா். கடந்த 2024-இல் ஒடிஸாவில் பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் முக்கியப் பங்காற்றினாா்.
கடந்த 2024-இல் நீட், நெட் வினாத்தாள் கசிவுகளின்போதும் சா்ச்சையில் சிக்கிய பிரதான், இப்போது நீட், சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் முறையில் முறைகேடுகள் உள்ளிட்டவற்றுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தி, சிஜேபி நடத்திய தொடா் போராட்டங்களால் பதவி விலகியுள்ளாா்.
An unexpected setback in Pradhan's political journey.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.