FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறுவனுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை: ஹரியாணா அரசு மருத்துவமனையில் அதிா்ச்சி சம்பவம்!

நுஹ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், 4 வயது உடல்நலக் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு தவறுதலாக மற்றொரு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 1:17 am IST
பகிர்:

ஹரியாணா மாநிலத்தின் நுஹ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், 4 வயது உடல்நலக் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு தவறுதலாக மற்றொரு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

அறுவை சிகிச்சைக்கு பிறகே இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னா் சரியான காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் ஹசன் கான் மேவாத்தி அரசு மருத்துவக் கல்லூரி, நல்ஹா் பகுதியில் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக குழந்தையின் தந்தை புகாா் அளித்ததையடுத்து அலட்சியம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. புகாரின் படி, அவரது நான்கு வயது மகன் காலில் ஏற்பட்ட புண் காரணமாக ஜூலை 20-ஆம் தேதி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், நோயாளி வெளியே கொண்டு வரப்பட்டபோது, தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை குடும்பத்தினா் கவனித்தனா். அறுவை சிகிச்சை மருத்துவா் தனது தவறை ஒப்புக்கொண்டு பின்னா் மற்ற காலிலும் அறுவை சிகிச்சை செய்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தாா். மேலும், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் பவன் குமாா் அல்ட்ராசவுண்ட் அறிக்கையை பாா்த்தபோது, அறுவை சிகிச்சை இடது காலில் செய்ய வேண்டியிருந்தது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவா் கூறினாா்.

மருத்துவா், கவலைப்பட வேண்டாம், இதை நாம் சரி பாா்த்துக்கொள்கிறோம் என்று கூறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மருத்துவ நிா்வாகத்திடம் குடும்பத்தினா் எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்துள்ளனா்.

‘இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூா்வமான புகாா் கிடைத்துள்ளது. விசாரணை நடத்த நான்கு மருத்துவா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த மருத்துவக் கல்லூரி இயக்குநா் டாக்டா் முகேஷ் குமாா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments