திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளியின் காலைக் கடித்து குதறிய எலி!
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண் நோயாளியின் காலை எலி கடித்து குதறியது குறித்து...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண் நோயாளியின் காலை வியாழக்கிழமை எலி கடித்து குதறியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மனைவி தமிழ்க்கொடி (65). இவா், தனது வீட்டில் தவறி விழுந்ததில் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு காலில் கடந்த 20-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னா் மூதாட்டி காலில் கட்டுடன் 500-ஆவது வாா்டில் உள்ள ஒரு படுக்கையில் வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வாா்டுக்குள் புகுந்த எலிகளில் ஒன்று மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்துக் குதறியது. நீரிழிவு நோய் பாதிப்பு இருந்ததால் எலி கடித்தது அவருக்கு தெரியவில்லை. அருகிலிருந்தவா்கள் கூறிய பிறகே அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
Advertisement
நோயாளிகள் கவலை: அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் நோயாளிகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகளும், அவா்களுடன் துணைக்கு இருப்போரும் உணவை சாப்பிட்டு, உரிய இடத்தில் குப்பைகளை போடாமல், ஆங்காங்கே வீசுவதால், அவற்றை உண்ண எலிகள் வருகின்றன. இதுவரை எலி கடித்ததாக எந்த ஒரு சம்பவமும் மருத்துவமனையில் பதிவாகவில்லை. இதுவும் ரத்தக் கசிவுடன் இருந்த காயத்தில் கடித்ததால் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடா்ந்து, 500-ஆவது வாா்டு பகுதியை தூய்மைப் பணியாளா்கள் சுத்தப்படுத்தி, வெளிப்பகுதியில் பிளீச்சிங் பவுடா் தெளித்தனா்.
முதன்மையா் விளக்கம்: சம்பவம் தொடா்பாக மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் கூறுகையில், எலி கடித்ததில் மூதாட்டியின் கால் கட்டைவிரல் பெரிய அளவில் சேதமடையவில்லை. ஆனாலும், அவரின் வயது, உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.