கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை
நாட்டில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக குறைந்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளது குறித்து...
போபால்: நாட்டில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், கங்கை யில் படகு சவாரியின்போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக கைது செய்து, மூன்று மாதங்களுக்கு ஜாமீன் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரணாசியில் கங்கை ஆற்றில் படகு சவாரி செய்தபோது இப்தார் நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதி ஜி.பி. சிங் நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது, ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்றவற்றை குற்றமாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றம் அல்ல என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது; அது குற்றமாக இருக்கவும் முடியாது. ஆனால், அந்த ஒரு காரணத்திற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 3 மாதங்கள் சிறையில் அடைத்ததோடு, அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஜாமீன் மறுக்கக்கப்பட்டுள்ளது வேதனையான ஒன்று.
கங்கை ஆற்றில் சிக்கன் சாப்பிடுவதை தடை செய்ய சட்டம் எதுவும் இல்லை; ஆனால், புனித நதியை அசுத்தம் செய்வதாகக் கூறி கங்கை ஆற்றில் படகு சவாரி செய்தபோது சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மூன்று மாதங்கள் சிறையில் அடைத்ததோடு, அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஜாமீன் மறுக்கக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு செயலுக்காக மக்களைக் கைது செய்து, மூன்று மாதங்களுக்கு ஜாமீன் மறுக்க முடியுமா? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்கள் இறைச்சி எலும்புகளை ஆற்றில் வீசியதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பகைமையை வளர்த்தல் மற்றும் பொதுத் தொல்லை கொடுத்தல் தொடர்பான பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் நீர் மாசு கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைக் குற்றச் செயல்களாக மாற்றும் பரந்த போக்கை இந்த வழக்கு பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி புயான், "இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான இடம் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவரது கருத்துகளை தெரிவிப்பதும், அமைதியான முறையில் போராடும் உரிமையும் மக்களின் அடிப்படை உரிமைகளாகும்," என்றும் கூறினார்.
விவாதமும், மாற்றுக்கருத்துகளுமே ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால், துரதிஷ்டவசமாக, சாதாரணை செயல்பாடுகள் கூட குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது.
சட்ட பல்கலை மாணவர்கள் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த நீதிபதி புயான், தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகு அவை கடுமையான ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும். ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பது அதை வழங்கிய நீதிபதியை விமர்சிப்பதாகது என்றும், நீதித்துறையின் நம்பகத்தன்மை என்பது சுய மதிப்பீட்டில் இல்லை, மாறாக மக்களின் நம்பிக்கையில்தான் உள்ளது.
கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியதற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறியவர், புதிய தலைமுறை வழக்குரைஞர்களும் சட்ட மாணவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியின் மீதும் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் பெரிய நம்பிக்கையைக் காண்கிறேன் என்று கூறினார்.
Supreme Court Justice Ujjal Bhuyan has questioned the arrest and three-month detention of 14 Muslim youths accused of consuming chicken biryani...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.