FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

கரப்பான் பூச்சிகளும் தலைமை நீதிபதியின் சர்ச்சைக் கருத்துகளும்!

சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்கை விசாரிக்கத் தலைமை நீதிபதி மறுத்திருப்பது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 3:52 pm IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் - படம் சித்திரிப்பு - விஜய்
பகிர்:

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இதுதொடர்பான வழக்கை முன்வைத்து ‘என் நேரத்தை வீணாக்காதீர்கள்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்திருக்கும் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் முக்கிய கட்டமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 20), தில்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் வரை அமைதிப் பேரணி நடத்த சிஜேபி முயற்சித்தது.

Advertisement

Advertisement

இந்த அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களை தில்லி காவல்துறையினரும், துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், தடையை மீறி மாணவர்களும், இளைஞர்களும் பேரணியைத் தொடர முயற்சித்த நிலையில், அவர்கள் மீது கண்மூடித்தனமாக தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியது. சிறப்பு அதிரடிப் படைக் காவலர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

பெண்கள், மாணவ - மாணவிகள் என கண்மூடித்தனமாக காவல்துறையினர் தாக்கும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி காண்போரைப் பதறவைக்கின்றன.

- Salman Ali

மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கும் மாணவர், மாணவி மீது தடியடி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசுவது போன்ற புகைப்படங்களே தில்லி காவல்துறையின் வன்முறைக்கு சாட்சி.

இதற்கு மத்தியில், பெயர் பட்டைகூட (Name Badge) இல்லாத முறையான சீருடை அணியாமல் பாதுகாப்புக்கு வந்ததாகக் கூறப்படும் சிலர், போராட்டக்காரர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்கள் காவலர்களா? இல்லையா? என்றே தெரியவில்லை.

மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு போன்ற பதற்றமான பகுதிகளில் போராடுபவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ’பெல்லட் குண்டு’களை போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை / பாதுகாப்புப் படையால் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குருகிராமைச் சேர்ந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி என்ற 25 இளைஞர்கள் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பெல்லட் குண்டு (அல்லது அதுபோன்ற வேறு வகை குண்டு) காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் (பெல்லட் குண்டு பயன்படுத்தவில்லை என்று தில்லி காவல்துறை மறுத்திருக்கிறது).

இப்படியாக சர்சைகளுக்கு மேல் சர்சையில் தில்லி காவல்துறை சிக்கியுள்ளது.

இதற்கிடையே, தாங்களும் காயமடைந்ததாக கட்டுப்போட்டுக் கொண்டு ஓரிரு புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் தில்லி காவல்துறை, மாணவர்களுக்கு எதிராக 10 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

மாணவர்கள், இளைஞர்களுக்கு எதிரான தில்லி காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மூன்று நாள்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கிவைத்துள்ளனர்.

இவ்வாறாக, அரசியல் கட்சிகளைக் கடந்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னையை அவசர வழக்காக விசாரிக்கத் தங்களுக்கு நேரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரப்பான் பூச்சிகளும் தலைமை நீதிபதியும்

கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலையில்லா இந்திய இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இணையக் கணக்கில் அபிஜீத் தீப்கே என்ற இளைஞரால் தொடங்கப்பட்டதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. தற்போது நாட்டையே உலுக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கியவுடன், தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், சிஜேபி போராட்டத்தில் மாணவர்களுக்கு எதிராக காவல்துறையும் பிற பாதுகாப்புப் படையும் அத்துமீறியது தொடர்பாகவும், நீட் தேர்வில் சீர்திருத்தங்கள் கோரியும் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கறிஞரின் வாதமும் நீதிபதிகளின் கருத்தும்...

வழக்கறிஞர் - ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தில் காவல்துறை கொடூரமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தலைமை நீதிபதி - தயவுசெய்து எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள். எங்களைவிட உங்கள் நேரம் மிகவும் மதிப்புமிக்கது.

வழக்கறிஞர் - நீட் தேர்வை அரசு நியாயமான முறையில் நடத்த வேண்டும். வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் தேசியத் தேர்வு முகமையை கலைக்க வேண்டும்.

(வழக்கறிஞரின் வாதத்தை பொருட்படுத்தாமல், அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்)

வழக்கறிஞர் - போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான காணொலிகளை தாக்கல் செய்ய விரும்புகிறேன்.

தலைமை நீதிபதி - காணொலிகளைப் பார்க்க எங்களுக்கு விருப்பமில்லை. அவற்றைப் பார்ப்பதற்கான நேரமும் எங்களிடம் இல்லை.

தொடர்ந்து, மனுவை விசாரணைக்கு எடுக்கத் தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா அமர்வில், தில்லி காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்தபோது, “நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்" எனத் தெரிவித்து, விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்தின் விமர்சனத்தால்தான், அதையே அடிப்படையாக வைத்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி என அமைப்பு உருவானது. இதில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர். இதனால்தானோ என்னவோ, அந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பது நேரத்தை வீணடிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறாரா? அவரது கருத்தால் உருவான கட்சி என்பதால், இந்த பாராமுகமா என்றும் சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி, விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

summary

Cockroaches and the Chief Justice's controversial remarks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments