FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்

Updated On : 4 ஜூன் 2026, 4:27 am IST
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் தளம்
பகிர்:

12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு புதன்கிழமை இரவு 9.30 மணி வரை, 56,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை "எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு சிபிஎஸ்இ மேலும் தெரிவித்ததாவது: விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க்ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வழங்கிகளின் பணம் செலுத்தும் நடைமுறை மூலம் கட்டணங்களைச் செலுத்தலாம். இதற்கு, அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புதன்கிழமை காலை 9.30 மணி வரை மட்டும் சுமார் 40,000 மாணவர்கள் இந்த பணம் செலுத்தும் வழிமுறைகள் மூலம் எந்தவித சிக்கலும் இன்றி கட்டணம் செலுத்தியுள்ளனர். எனவே, மாணவர்கள் புரளிகளை நம்பாமல், சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்படும் அதிகாரபூர்வ தகவல்களை மட்டும் பின்தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டது.

நாடு முழுவதும் சுமார் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்தனர்.

Advertisement

Advertisement

முதல்முறையாக "திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர். இதன் காரணமாக, புதிய "திரையில் மதிப்பிடுதல்' நடைமுறை மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள்கள் சரியாக "ஸ்கேன்' செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல புகார்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஏற்கெனவே மிகப் பெரும் குளறுபடியில் சிக்கிய "கோயெம்ப்ட் எஜுடெக்' என்ற நிறுவனத்திடம் இந்த ஓஎஸ்எம் முறை தொடர்பான ஒப்பந்தத்தை சிபிஎஸ்இ வழங்கியது வெளிச்சத்துக்கு வந்தது. அதுமட்டுமன்றி, இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிப்பதற்காக, ஒப்பந்த நிபந்தனைகளில் தளர்வு அளித்து சிபிஎஸ்இ திருத்தங்கள் செய்ததாகவும் புகார்கள் எழுந்தது மிகப் பெரிய சர்ச்சையானது.

மேலும், விடைத்தாள் மறுமதிப்பீடுக்காக, விடைத்தாள் நகல் பெறுவதிலும், கட்டணம் செலுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகண்டே பிரசாந்த் சீதாராமும், புதிய செயலராக மூத்த அதிகாரி வருண் பரத்வாஜும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஓஎஸ்எம் முறை ஒப்பந்தம் விடப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments