தில்லி தீ விபத்து: பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு!
தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு செய்தது பற்றி...
தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ. 2 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தெற்கு தில்லியில் மால்வியா நகரில் ஹௌஸ் ராணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று(ஜூன் 3) காலை 8.51 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததையடுத்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தில்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இதுபற்றி தனது எக்ஸ்பக்கத்தில், "தில்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்கள் பலியானது மிகவும் துயரமான நிகழ்வாகும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் பிரதமர் மோடி நிவாரண நிதியுதவியாக வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
PM Modi Announces Rs. 2 Lakh Ex-Gratia for Delhi Fire Victims Families
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.