பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் கருத்து: பாஜக பதிலடி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக சார்பில் பதிலடி கொடுத்தது பற்றி..
பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு கூட பதவியில் நீடிக்கமாட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பாஜக சார்பில் பதிலடி கொடுத்தது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி புதன்கிழமையன்று பேசுகையில்,
மோடி ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமைப்பு தற்போது ஆட்டம் கண்டு, உள்ளுக்குள்ளேயே சரிந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் ஓராண்டுக் காலம் கூட மோடி பிரதமராக இருக்கமாட்டார்.
Advertisement
Advertisement
பிரதமர் மோடி அரசு மக்கள் அழுத்தத்தை ஒடுக்க முயன்று, அவசரநிலையை அமல்படுத்தக்கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ராகுலின் இந்த கருத்துகளுக்கு பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில்,
ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் சொந்த வரலாற்றையும் மனநிலையையும் பிரதிபலிக்கின்றது. ராகுல் அவசரநிலை வரலாற்றைக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால்தான், எல்லோரும் அவசரநிலையை அமல்படுத்தத் துடிப்பதாக அவர் நம்புகிறார்.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டது ஒரே ஒரு முறை மட்டுமே, அதுவும் இந்திரா காந்தியால் தான் செய்யப்பட்டது.
அரசியலமைப்பு நிறுவனங்களை அவர் எவ்வாறு பலவீனப்படுத்தினார் என்பதையும், அவற்றில் எவ்வாறு தலையிட்டார் என்பதையும் உலகம் நன்கு அறியும்.
உண்மையான அவசரநிலை என்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயேதான் நிலவுகிறது. ஜனநாயகத்தை விட வாரிசு அரசியலுக்கே முன்னுரிமை அளிக்கும் ராகுல் காந்தி, இன்றும் எங்குப் பார்த்தாலும் அவசரநிலை நிலவுவதாகவே கருதுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நிறுவன ரீதியான சரிவும், கிளர்ச்சியும் நிலவுகிறது. அங்கே அமைப்பு ரீதியான சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயேதான் உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர், வாரிசு அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவின் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம், வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் ஏற்படுத்துவதாகவும், பொய்களைப் பரப்புவது, பீதியை உருவாக்குவது மற்றும் ஆதாயம் தேடுவது இதுவே அவரின் செயல்முறை என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.
The BJP on Thursday hit back at Congress leader Rahul Gandhi over his claim that Prime Minister Narendra Modi will no longer remain in office in a year's time, accusing him of spreading propaganda.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.