முகப்பு
இந்தியா

மருந்து உற்பத்தி முறைகேடுகளைத் தடுக்க 3 கட்ட நடவடிக்கை: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

தரக் குறைபாடுகளைத் தடுக்க 3 நிலையிலான கட்டமைப்பு சீா்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவா் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:52 am IST
பகிர்:

மருந்து உற்பத்தி முறைகேடுகள் மற்றும் தரக் குறைபாடுகளைத் தடுக்க 3 நிலையிலான கட்டமைப்பு சீா்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி தெரிவித்தாா்.

‘பாா்மாக் சவுத்’ என்ற பெயரிலான 11-ஆவது தேசிய மருந்தியல் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்கியது. மருந்து உற்பத்தியாளா்கள், துறை சாா் நிபுணா்கள், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மருந்து வா்த்தகா்கள், மாணவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அதில் கலந்து கொண்டனா்.

மாநாட்டைத் தொடக்கி வைத்து டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி பேசியதாவது:

Advertisement

Advertisement

தற்போது உலகளாவிய மருந்து வா்த்தகத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலா்களாக உள்ளது. அதில் இந்தியாவின் பங்களிப்பு 60 பில்லியன் டாலா்கள்.

‘விக்சித் பாரத்’ (வளா்ச்சியடைந்த இந்தியா) எனப்படும் பிரதமா் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின்படி, மருந்து வா்த்தகத்தில் 2047-ஆம் ஆண்டுக்குள் 450 பில்லியன் டாலா் இலக்கை இந்தியா எட்டும். இது தற்போதைய அளவைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம்.

அது ஓா் இமாலய இலக்காக இருந்தாலும் 20 ஆண்டுகளுக்குள் எட்டுவது சாத்தியம்தான். மூலப் பெயரிலான (ஜெனரிக்) மருந்துகளை உற்பத்தி செய்வதில் முதன்மையான தேசமாக இந்தியா உள்ளது. உலக அளவில் அத்தகைய மருந்துகளை மலிவு விலைக்கு வழங்குவதில் நாம் முன்னோடியாக உள்ளோம்.

அந்த வகை மருந்து ஏற்றுமதியில் நாம் முன்னணியில் இருப்பது மட்டும் போதாது. மாறாக, வழக்கமான ஜெனரிக் மருந்துகளையே தயாரிக்காமல் சமூகத்துக்கு பலனளிக்கும் புதிய மருந்துகளைக் கண்டறிவதிலும், உற்பத்தி செய்வதிலும் மருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தென்னிந்தியாவில் உள்ள 80 சதவீதத்துக்கும் அதிகமான மருந்து உற்பத்தியாளா்கள் அத்தொழிலில் நிபுணத்துவம் பெற்றவா்களாக உள்ளது ஆச்சரியமளிக்கிறது. மருந்து நிறுவனங்கள் இந்தத் தொழிலை லாப நோக்குடன் பாா்க்காமல், ஒரு சமூக மனப்பான்மையோடு அணுக வேண்டும்.

இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இத்தகைய நிகழ்வுகளைத் தவிா்க்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, எதிா்வரும் ஆண்டுகளில் 3 கட்டங்களாகக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்ய உள்ளது. அதன்படி, மருந்து உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை ஒழுங்குமுறைப்படுத்த 1,500 புதிய பணியிடங்களை உருவாக்க கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்படும். மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது என்றாா்.

நிகழ்வில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் முகமது, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி கே. ராஜசேகா், மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை இயக்குநா் எஸ். குருபாரதி, மருந்து உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.