கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தது பற்றி..
கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (ஜூன் 12) வழிபாடு மேற்கொண்டார்.
தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக தில்லி சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதோடு, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அதோடு, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்களை சந்தித்தார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் சந்திப்பு நிகழ்த்தினார்.
நீதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்து, இன்று தமிழகம் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி, முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முதல்வர் விஜய் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தார்.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வந்த தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கோயில் அர்ச்சகர்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
முதல்வர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள வெள்ளி வாள் ஒன்றை காணிக்கை அளித்தார்.
முன்னதாக, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முன்னாள் முதல்வராக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் சென்று வழிபட்டுள்ளனர். அதன்வழியில், முதல்வர் விஜய் இன்று கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்தார். இசைஞானி இளையராஜாவும் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர் ஆவார்.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு 2.5 அடி நீள தங்க வாளைக் எம்ஜிஆர் காணிக்கையாக அளித்திருந்தார்.
கொல்லூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் முதல்வர் விஜய் தாமே காரை ஓட்டிக் கொண்டு புறப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
Tamil Nadu Chief Minister Vijay offered prayers today (June 12) at the renowned Kollur Mookambika Temple in Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.