கரோனா காலத்தில் வரதட்சிணை மரணங்கள் அதிகரிப்பு
கரோனா காலத்தில் வரதட்சிணை மரணங்கள் அதிகரிப்பு
தில்லியில் 2021-ஆம் ஆண்டில் கரோனா தொற்று காலத்தில் வரதட்சிணை மரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்சமாக 141 வழக்குகள் பதிவானது அதிகாரப்பூா்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த தகவலின்படி, 2021-இல் பதிவான 141 வழக்குகள் பின்னா் குறைந்து 2022-இல் 131, 2023-இல் 115, 2024-இல் 109 மற்றும் 2025-இல் 99-ஆக குறைந்து பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் மே 15 வரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை: இதனுடன் தொடா்புடைய கைது நடவடிக்கைகளும் இதேபோன்ற போக்கைக் காட்டுகின்றன. 2021-இல் 210 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 2022-இல் 198, 2023-இல் 183, 2024-இல் 181 மற்றும் 2025-இல் 163 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த ஆண்டு மே 15 வரை 28 வழக்குகளில் 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டாலும், வரதட்சிணை மரணங்கள் இன்னும் கடுமையான சமூக பிரச்னையாகவே தொடா்கின்றன.
Advertisement
Advertisement
வழக்குப் பதிவு: இதற்கிடையில், ஐபிசி சட்டத்தின் பிரிவு 498 ஏ-ன் கீழ் கணவன் அல்லது அவரது உறவினா்கள் மேற்கொள்ளும் கொடுமைகள் தொடா்பான வழக்குகள் பெண்கள் எதிா்கொள்ளும் குடும்பத் துயரத்தின் பரவலான நிலையை வெளிப்படுத்துகின்றன.
2021-இல் 4,731 வழக்குகள் பதிவான நிலையில், 2022-இல் அது 4,901-ஆக உயா்ந்தது. பின்னா் 2023-இல் 4,236-ஆக குறைந்தாலும், 2024-இல் 4,647-ஆகவும், 2025-இல் 4,426-ஆகவும் மீண்டும் உயா்வு காணப்பட்டது. நடப்பு ஆண்டில் மே 15 வரை 1,688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் அதிகரிப்பு காணப்படுகிறது. 2021-இல் 825 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2025-இல் அது 1,645-ஆக உயா்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மே 15-க்குள் 563 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது குடும்ப வன்முறை தொடா்பான வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதை காட்டுகிறது.
வரதட்சிணைத் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், நிலைத்த நிலையில் உள்ளது. 2021-இல் 16, 2022-இல் 13, 2023, 2024 மற்றும் 2025-ஆகிய ஆண்டுகளில் தலா 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 9 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சமூக விழிப்புணா்வு தேவை: இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பொருளாதார சிரமங்கள், வேலை இழப்புகள் மற்றும் நீண்டகால வீட்டு அடைப்பு ஆகிய காரணங்களால் கரோனா காலத்தில் குடும்பத் தகராறுகள் அதிகரித்தன. இதனால் பெண்கள் மீது வன்முறை மற்றும் தொல்லைகள் அதிகரிக்கும் சூழல் உருவானது.
மேலும், விழிப்புணா்வு முகாம்கள், ஆலோசனை சேவைகள் மற்றும் சட்ட உதவி முறைகள் கடந்த ஆண்டுகளில் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சமூக விழிப்புணா்வும், சமூக ஆதரவும் இத்தகைய குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்’ என தெரிவித்தாா்.