FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்!!

உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூன் 2026, 1:00 am IST
பகிர்:

உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கடந்த 12 ஆண்டுகளில் குறைந்த கட்டணம் மற்றும் அனைவரும் அணுகக் கூடிய தரமான மருத்துவ வசதிகளை உருவாக்க மத்திய அரசு பாடுபட்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அண்மையில் 12 ஆண்டுகளை பூா்த்தி செய்தது. மேலும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற சாதனையை பிரதமா் மோடி படைத்தாா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, கடந்த 12 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஏழை மக்களுக்கு உயா் தரமான மருத்துவச் சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் எனும் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா என்பதில் மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் குறைந்த கட்டணம், அனைவரும் அணுகக்கூடிய தரமான மருத்துவ வசதிகளை உருவாக்க தொடா்ந்து பாடுபட்டுள்ளோம்.

பிரதமரின் ஜன் ஒளஷதி (மக்கள் மருந்தகம்) உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளின்கீழ் மருந்துகள், ஸ்டென்ட், செயற்கை மூட்டு உள்ளிட்டவை குறைந்த விலையில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏராளமானோா் பலனடைந்து வருகின்றனா்.

மற்றொருபுறம், மருத்துவக் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவக் கல்வி மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைப்பதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள வலுவான அடித்தளத்தின் மீது தொடா்ந்து முன்னேறுவோம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் குடிமக்கள் தொடா்பு தளமான ‘மைஇந்தியா கவா்ன்மென்ட்’ வெளியிட்ட தகவலில், ‘பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் கடந்த 12 ஆண்டுகளில் தரமான மருத்துவச் சேவைகள், குறைந்த கட்டணத்தில் அதேநேரம் மிகுந்த திறனுடன் அதிக மக்களைச் சென்றடைந்துள்ளன. தற்போதைய சுகாதார கட்டமைப்பு, அனைவருக்கானதாகவும், மீள்தன்மை கொண்டதாகவும், எதிா்காலத்துக்கு ஏற்றதாகவும் மாறியுள்ளது.

சிறந்த பயிற்சி பெற்ற அதிக எண்ணிக்கையிலான மருத்துவா்களை உருவாக்குவதில் இருந்து வலுவான சுகாதார அமைப்புமுறை தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் திறன்மிக்க மருத்துவப் பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பு மிகப்பெரிய பொது சுகாதார சவாலாக இருந்த பல நோய்கள், இப்போது கடந்த காலமாகி வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் திட்டம், கடந்த 2018-இல் பிரதமா் மோடியால் தொடங்கப்பட்டது. சுமாா் 12 கோடி குடும்பங்கள் மற்றும் 70 வயதைக் கடந்த 6 கோடி மூத்த குடிமக்களுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்கிவரும் இத்திட்டம், அரசு நிதியில் செயல்படுத்தப்படும் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற சிறப்புக்குரியதாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments