நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா
நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு விகிதம் சுமாா் 23 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு விகிதம் சுமாா் 23 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.
மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா தலைமையில் காணொலி வழியாக உயா்நிலை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
காசநோய் இல்லாத பாரதம் என்ற பிரசாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் ஜெ.பி.நட்டா பேசுகையில், ‘காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய மிகச் சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டில் ஒரு லட்சம் பேரில் 243 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டு ஒரு லட்சம் பேரில் 187 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம், நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு விகிதிம் சுமாா் 23 சதவீதம் குறைந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு லட்சம் பேரில் 34 போ் காசநோயால் உயிரிழந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 21 போ் காசநோயால் உயிரிழந்தனா். இதன்மூலம், நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைந்தது.
எம்.பி., எம்எல்ஏக்களிடம்...: தங்கள் தொகுதிகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறு தமது எம்.பி., எம்எல்ஏக்களிடம் மாநில அரசுகள் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும். காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து, அதை உரிய காலத்தில் சரி செய்யும் நோக்கில், மாநில சுகாதார அமைச்சா்கள் மாவட்ட அளவில் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காசநோய் இல்லாதபோதுதான், இந்த நடவடிக்கை உண்மையான வெற்றியடையும்’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.