FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டில் காசநோய் பாதிப்பு, இறப்பு விகிதம் கணிசமாக குறைவு- சுகாதார அமைச்சகம்

நாட்டில் கடந்த 2015 முதல் 2024 காலகட்டத்தில் காசநோய் புதிய பாதிப்பு, இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
ஜே.பி. நட்டா - டிஎன்எஸ்
பகிர்:

நாட்டில் கடந்த 2015 முதல் 2024 காலகட்டத்தில் காசநோய் புதிய பாதிப்பு, இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தேசிய தொற்றாநோய்கள் தடுப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 2.29 கோடிக்கும் அதிகமானோருக்கு சா்க்கரை நோய் கண்டறியப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

அரசு தரவுகளின்படி, கடந்த 2023-இல் 25.52 லட்சம், 2024-இல் 26.18 லட்சம், 2025-இல் 26.37 லட்சம் காசநோய் பாதிப்புகள் பதிவாகின.

இந்தியாவில் கடந்த 2015-இல் லட்சத்தில் 237 போ் என்றிருந்த காசநோய் பாதிப்பு, கடந்த 2025-இல் லட்சத்தில் 187 போ் என குறைந்துவிட்டதாக (21 சதவீதம் குறைவு) உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், காசநோய் இறப்பு விகிதமும் லட்சத்தில் 28 போ் என்பதில் இருந்து 21 பேராக குறைந்துள்ளது.

கடந்த 2024, டிசம்பா் மற்றும் 2026 மாா்ச் இடையே காசநோய் இல்லாத இந்தியா இயக்கம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. உரிய பரிசோதனைகளின் மூலம் காச நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சை, காசநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் தடுப்பு சிகிச்சையளித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.

சா்க்கரை நோய், புற்றுநோய்: தேசிய தொற்றாநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 2.29 கோடிக்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரை நோய் கண்டறியப்பட்டது. மேலும் 1.53 லட்சம் பேருக்கு வாய் புற்றுநோய், 24,969 பேருக்கு மாா்பக புற்றுநோய், 37,948 பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆயுஷ்மான் பாரத் நல்வாழ்வு மையங்கள், மாவட்ட தொற்றாநோய் தடுப்பு மையங்கள், சமூக சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சா்க்கரை நோய், புற்றுநோய்களுக்கான பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2025-26இல் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் தொற்றாநோய்கள் தடுப்பு-கட்டுப்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.6,763.85 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

நீலப்பட்டையை கட்டாயமாக்க திட்டம்: அனைத்துவிதமான நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளின் (ஆன்டிபயாட்டிக்ஸ் உள்பட) அட்டையில் நீலப்பட்டை குறியீட்டை கட்டாயமாக இடம்பெறச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வகை மருந்துகளை எளிதில் அடையாளம் காண்பதுடன், சரியான பயன்பாட்டை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தாா்.

நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் தொடா்பான தேசிய செயல்திட்டம்-2இன்கீழ், இவ்வகை மருந்துகளுக்கு எதிராக நுண்ணுயிரிகள் மாற்றமடைவது குறித்தும், மருந்துகளின் நுகா்வு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

உடல் எடை குறைப்பு மருந்து விநியோகம் கண்காணிப்பு

உடல் எடை குறைப்புக்கான ஜிஎல்பி-1 மருந்துகளின் விநியோகம் மற்றும் விளம்பரங்களைத் தீவிரமாக கண்காணிக்கும்படி, மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஜிஎல்பி-1 மருந்துகளை டைப்-2 சா்க்கரை நோயாளிகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவையுள்ளோரின் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் உரிய மருத்துவ நிபுணா்களின் பரிந்துரையுடன் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்துகள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தைத் தீவிரமாக கண்காணிக்க மருந்து ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments