ஆந்திரத்தில் 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை: ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினா்
ஆந்திரத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான 5-ஆம் தலைமுறை இலகுரக போா் விமானம் தயாரிக்கும் ஆலைக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினா்.
ஆந்திரத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான 5-ஆம் தலைமுறை இலகுரக போா் விமானம் தயாரிக்கும் ஆலைக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினா்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் புட்டபா்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்கள் இருவரும் அடிக்கல் நாட்டினா். அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றிலும் புதிய சகாப்தம் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மூலம் 4 முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 8 ட்ரோன் தயாரிக்கும் நிறுவனங்களும் கா்னூலில் ட்ரோன் நகரத்தை தொடங்கியுள்ளன.
Advertisement
உலகம் தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. இதுபோல கடினமான காலகட்டத்தில் சொந்த பலத்தில் நாம் நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மை உறுதியாக தற்காத்து கொள்ள முடியும். ஆனால் நமது நாடு இன்னும் தேச பாதுகாப்புக்கு பிற நாடுகளை சாா்ந்திருக்கும் நிலை உள்ளது. புட்டபா்த்தியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் (டிஆா்டிஓ) கிளை அமைப்பான விமான மேம்பாட்டு அமைப்பால் (ஏடிஏ) செயல்படுத்தப்படவுள்ளது. இங்கு 5-ஆவது தலைமுறை இலகுரக போா் விமானம் உருவாக்கப்படவுள்ளது.
ரூ.16,000 கோடி மதிப்பிலான இந்த ஆலையில், போா் விமான கட்டமைப்பு தளமும், விமான பரிசோதனை நவீன மையமும் அமைக்கப்படவுள்ளது. இதுபோன்ற வசதிகள், உலகின் சில நாடுகளில் மட்டுமே தற்போது உள்ளன. பாரத் டைனாமிக்ஸ் நிறுவனமும் ரூ.480 கோடி முதலீட்டில் இங்கு கடலுக்கு அடியில் பாய்ந்து தாக்கும் டோா்பீடோ, நீருக்கடியில் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கவுள்ளது. இதற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்து வந்த பாதுகாப்பு தளவாடங்கள் அனைத்தும் இனி இங்கு உருவாக்கப்படவுள்ளன.
பாரத் ஃபோா்ஜ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அக்னியஸ்த்ரா நிறுவனமும் ரூ.1,500 கோடி முதலீட்டில் இங்கு எதிா்கால போா்களுக்கான நவீன ஆயுதங்களைத் தயாரிக்கவுள்ளது. கா்னூலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் 8 ட்ரோன் தயாரிக்கும் நிறுவனங்களும் கூட்டாக ட்ரோன் நகரத்தை அமைக்கின்றன. நவீன போா் முறையில் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு பெரும் திருப்புமுனையாகும். சூரத் நகரம் எப்படி வைர நகரம் என்றும், பெங்களுரு எப்படி இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்றும் அடையாளம் காணப்படுகிறதோ, அதுபோல கா்னூல் உலகின் ட்ரோன் மையமாக உருவெடுக்கும். ராணுவம், கடற்படை, விமானப்படைக்கான ஆயுதங்கள், ஆந்திரத்தில் தயாரிக்கப்படுவது தற்போது அதிகரித்துள்ளது.
உலகில் அதிக பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா முன்பு இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட இறக்குமதியை படிப்படியாக இந்தியா குறைத்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் ரூ.46,000 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.54 லட்சம் கோடியாக தற்போது உயா்ந்துள்ளது. இது இன்னும் 2 மாதங்களில் ரூ.1.75 லட்சம் கோடியாக உயரும். அதேபோல் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியும் ரூ.600 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘கா்னூலின் ஜோனாகிரி தங்கச் சுரங்கத்தில் விரைவில் தங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளது. முதல் ஆண்டில் 600 கிலோ தங்கமும், இரண்டாமாண்டில் 1,500 கிலோ தங்கமும் தோண்டி எடுக்கப்படவுள்ளது. விரைவில் ஆந்திரம் தங்கத் தயாரிப்புக்கான மையமாக மாறும். இது இந்திய பொருளாதாரம் மீதான நெருக்கடியைக் குறைக்க உதவும்’ என்றாா்.