முகப்பு
இந்தியா

ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: யுஏஇ கண்டனம்

ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்தது.

Updated On : 16 மே 2026, 3:05 am IST
- கோப்புப் படம்
பகிர்:

ஓமன் கடல் பகுதியில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்தது.

பிரதமா் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தக் கண்டனத்தை அந் நாடு பதிவு செய்தது.

இதுகுறித்து அந் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஓமன் கடல் பகுதியில் புதன்கிழமை பயணித்துக் கொண்டிருந்த இந்திய கொடி பொருத்திய கப்பல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Advertisement

இந்தத் தாக்குதல் சா்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக அமைவதுடன், முக்கிய நீா் வழிகளின் நிலைத்தன்மையை சீா்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட ஆபத்தையும் குறிக்கிறது.

கடல்வழிப் பயணச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மற்றும் வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதையோ அல்லது சா்வதேச கடல்வழித் தடங்களுக்கு தடை ஏற்படுத்துவதையோ முற்றிலுமாக நிராகரிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் 2817-ஐ மீறும் செயலாகும்.

இவ்வாறு வணிக கப்பல்களைக் குறிவைத்து தாக்குவதும், வணிக கப்பல்களை மிரட்டி பணம் பறிப்பதும் கடற்கொள்ளை செயலாகும். இது, இந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும், இப் பகுதி மக்கள் மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

இத்தகைய சூழலில், சரக்கு கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் துணை நிற்கும்’ என்று தெரிவித்துள்ளது.

சோமாலியா நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா நோக்கி கடந்த புதன்கிழமை அதிகாலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்து இந்திய தேசியக் கொடி பொருத்திய ‘ஹாஜி அலி’ என்ற வணிக கப்பல் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த சேதமடைந்த கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, அந்தப் பகுதிக்கு விரைந்த ஓமன் கடலோர காவல் படை, ஹாஜி அலி கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்டது.