முகப்பு
இந்தியா

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

தாமதமாகும் வெளிநாட்டு மருத்துவப் படிப்புகள் சேர்க்கை

Updated On : 18 மே 2026, 5:51 am IST
நீட் - Center-Center-Bangalore
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் } யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

மே 3}ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் கசிவு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (என்டிஏ), நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதாகவும் மறுதேர்வு வரும் ஜூன் 21}ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் தேசிய அளவில் ஒரு மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. அது, நீட் போன்ற முக்கிய தேர்வுகளை நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட என்டிஏ என்ற அமைப்பு, மறுதேர்வு மூலம் உண்மையிலேயே அதன் நற்பெயரை மீட்டெடுத்து விடுமா என்பதுதான்.

Advertisement

நீட் } யுஜி தேர்வு நடந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு, என்டிஏ அமைப்புக்கு உள்ளிருந்தே "மாதிரி வினாத்தாள்' மோசடி நடந்ததை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) புலனாய்வு உறுதிப்படுத்தியது. அதன் பிறகே தேர்வு ரத்துக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தக் கசிவின் காரணமாக, தேர்வுக்கு சுமார் 42 மணி நேரத்துக்கு முன்பே அசல் கேள்விகள் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பரவியதாகக் கூறப்படுகிறது.

இது என்டிஏவின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது. காரணம், 2026}ஆம் ஆண்டு தேர்வில் "எவ்வித பிழைக்கோ, சகிப்புத்தன்மைக்கோ இடமில்லை' என்ற கடுமையான கொள்கை பின்பற்றப்படுவதாக என்டிஏ உறுதியளித்திருந்தது. அதன்படி, காவல் துறை பாதுகாப்புடன் தேர்வுப் பொருள்களை பிறமையங்களுக்கு கொண்டு செல்லுதல், ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தல், பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நிகழ்நேரத்தில் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தபோதிலும், இந்தப் பலகட்டப் பாதுகாப்பு அம்சங்கள், என்டிஏவுக்கு வெளியே பணிகளை தொடங்கும் முன்பே, உள்ளுக்குள்ளேயே பாதுகாப்பு நெறிகள் மீறப்பட்டுள்ளதால் பின்னெடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பயனற்றுப் போயின.

தேர்வு எழுதுவோர் எதிர்கொள்ளும் மிகுதியான மன உளைச்சலையும், நிதி நெருக்கடியையும் உணர்ந்து, ஜூன் 21}ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வுக்காக முன்னெப்போதும் இல்லாத நிவாரண நடவடிக்கைகளை மத்திய கல்வித் துறை இப்போது அறிவித்துள்ளது.

அதன்படி, மறுதேர்வு 100% இலவசமாக நடத்தப்படும், மே 3}ஆம் தேதி நடந்த தேர்வுக்காக ஏற்கெனவே செலுத்திய அனைத்து விண்ணப்பக் கட்டணங்களும் திருப்பித் தரப்படும், பயணச் சுமையைக் குறைக்க தேர்வர்கள் விருப்ப தேர்வு நகரங்களை தேர்வு செய்ய ஒரு வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான புதிய அனுமதி அட்டைகள் ஜூன் மாத மத்தியில் வழங்கப்படவுள்ளன.

குறிப்பிடத்தக்க சலுகையாக, மறுதேர்வு நடக்கும் நாளில் மாணவர்களுக்கான வழக்கமான தேர்வு நேரம் போக கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.

எண்ம முறைக்கு சவால்: இத்தகைய தேர்வுக்கு பாரம்பரியமான பேனா}காகித (ஓஎம்ஆர்) வடிவம் இனி கைகொடுக்காது என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, ஒரு முக்கியக் கொள்கை மாற்றமாக, 2027 முதல் நீட்}யுஜி தேர்வு, ஜேஇஇ மெயின் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு இணையாக, முற்றிலும் கணினி அடிப்படையிலான தேர்வு (சிபிடி) முறைக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

என்டிஏ அதிகாரிகளிடம் பேசியதில் இருந்து, பல அமர்வுகளில் ஒரே நேரத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு எண்ம முறையிலான தேர்வுகளை நடத்த ஏதுவாக தனது கணினி அடிப்படையிலான தேர்வுத் திறனை அதிகரிக்க மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த என்டிஏ திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், தேசிய அளவில் பல்வேறு மாநில அரசுகள், இப்போதும் கூட நீட் தேர்வு முறைக்கு எதிராக இருப்பதால், என்டிஏ நடத்தும் தேர்வு மீதான நம்பிக்கையைப் பெற அதற்கு "வெறும் மறுதேர்வு' தீர்வாக இருக்காது என்று பல்வேறு கல்வி அமைப்புகளும் மாணவர் சங்கங்களும் வாதிடுகின்றன. மருத்துவப் படிப்பு நுழைவுச்சேர்க்கை விஷயத்தில் இந்தியா வெளிநாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பொறுப்புக்கூறல் வெற்றிடம்: மறுதேர்வு விவகாரத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (யுடிஎஃப்) ஆகியவை ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. தற்போதைய வடிவத்தில் உள்ள என்டிஏ அமைப்பை கலைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை யுடிஎஃப் நாடியுள்ளது. மத்திய குடிமைப் பணிகள் ஆணையம் (யுபிஎஸ்சி) போன்ற சட்டபூர்வ அமைப்புகளைப் போல இல்லாமல், என்டிஏ "பதிவு செய்யப்பட்ட சொசைட்டி' தகுதியைக் கொண்டிருப்பதால், அது நேரடி நாடாளுமன்றப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்கப்படுவதாக யுடிஎஃப் கூறுகிறது.

"2024' நீட் சர்ச்சைகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட கே. ராதாகிருஷ்ணன் குழு, நீட் வினாத்தாள் தயாரிப்பு முறையில் வெளிப்பணியாளர்களைக் குறைக்கவும், தற்காலிகப் பணியாளர் முறையிலிருந்து விலகி இருக்கவும் பரிந்துரைத்தது. இருப்பினும், 2026}ஆம் ஆண்டு கசிவு, உள்கட்டமைப்பு பலவீனங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.

மனச்சோர்வு: நீட் வினாத்தாள் கசிவு, நுழைவுத் தேர்வு ரத்து போன்றவற்றால் மாணவர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்பு கடுமையாகவே உள்ளது. உத்தர பிரதேசம், கோவாவில் இரண்டு மாணவர்களின் தற்கொலைகளும், தில்லியில் ஒரு மாணவியின் தற்கொலையும் இதற்கு உதாரணம்.

இந்நிலையில், வரும் ஜூன் 21}ஆம் தேதி 22 லட்சம் தேர்வர்களுக்கு பிழையற்ற எழுத்துவழி மறுதேர்வை நடத்துவது, தேசிய தேர்வு முகமையின் உடனடி மற்றும் மிகப்பெரிய சவால்கள் நிறைந்த ஒரு அக்னிப் பரீட்சையாகும். இருப்பினும், எந்தத் தடங்கலுமின்றி மறுதேர்வை நடத்துவதால் மட்டும் மக்களின் நம்பிக்கையை என்டிஏவால் மீட்டெடுத்துவிடாது.

"என்டிஏ' தனது நற்பெயரை தற்காத்துக் கொள்ள விரும்பினால், ஜூன் 21 வினாத்தாளின் முழுமையான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டும், வினாத்தாள் கசிவில் தொடர்புடைய "கல்வி மாஃபியா' மீது சிபிஐ விரைவாக குற்றச்சாட்டுகள் பதிய ஒத்துழைக்க வேண்டும், எதிர்காலத்தில் வெளிப்படையான, சட்டபூர்வமான பொறுப்புக்கூறலுக்கு உள்பட்ட எண்ம முறையிலான உள்கட்டமைப்பை தனது அமைப்பில் என்டிஏ நிறுவ வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். அதுவரை, இந்தியாவின் வருங்கால மருத்துவர்களின் நம்பிக்கையும் எதிர்காலமும் ஒரு மெல்லிய நூலிழையில்தான் தொங்கிக்கொண்டிருக்கும்.

தாமதமாகும் வெளிநாட்டு மருத்துவப் படிப்புகள் சேர்க்கை

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்துக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நீட் தகுதிச் சான்றிதழ் கட்டாயமாகும். ஏற்கெனவே சில நாடுகள் விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்க 3 முதல் 8 வாரங்கள் வரை எடுத்துக்கொள்வதால், நீட் மறுதேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவரும் என்பதால் மாணவர்கள் கல்வி விசா பெறுவதும் தாமதமாகும்.

இந்திய மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் தகுதி குறித்து உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக வெளிநாட்டு சேர்க்கை விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளன.

ரஷியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கான தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு ஏற்கெனவே ஒத்திவைத்துள்ளன. இதன் காரணமாக ஒட்டுமொத்த சேர்க்கை செயல்முறையும் அக்டோபர் மாதம் வரை நீளக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.