ஆந்திரத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கும் ராயல் என்ஃபீல்ட்!
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே உற்பத்தி ஆலையை வைத்திருந்த பிரபல இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தற்போது ஆந்திரத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கவுள்ளது.
அதிகரித்து வரும் தேவை காரணமாக இந்த புதிய உற்பத்தி ஆலை தொடங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
Advertisement
Advertisement
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி அருகேயுள்ள தடா பகுதியில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. இதற்கென ரூ. 2,500 கோடி முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவன இயக்குரின் ஒப்புதலுக்குப் பின் ஒவ்வொரு கட்டமாக இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
தமிழகத்தை விட்டு முதல் முறையாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை வெளி மாநிலத்தில் அமைக்கின்றது. இரு சக்கர வாகனச் சந்தையின் தேவைக்கேற்ப எதிர்கால வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 14.6 லட்சம் யூனிட்கள் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது அதன் முழு உற்பத்தி திறனை நெருங்கியுள்ளது.
தமிழகத்தின் செய்யாறு பகுதியில் ரூ. 958 கோடி செலவில் புதிய ஆலையைத் தொடங்குவதாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த ஆலையின் மூலம் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 20 லட்சமாக உயருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள 4 உற்பத்தி ஆலைகளைத் தவிர்த்து வங்கதேசம், நேபாளம், பிரேசில், தாய்லாந்து, அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் பாகங்களை ஒன்றிணைக்கும் (அசெம்ப்ளி) ஆலைகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் 3,200 விற்பனையகங்கள் மூலம் 80 நாடுகளில் விற்பனை மேற்கொள்ளும் ராயல் என்ஃபீல்ட் நிறுவன வாகனங்களுக்குத் சந்தையில் தேவை மேலும் அதிகரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து, புதிய உற்பத்தி ஆலை ஆந்திரத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதுபற்றி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த ஆலையில் ஆண்டுக்கு 9,000 பைக்குகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதன் மூலம் 15,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Royal Enfield to set up a new manufacturing plant in Andhra Pradesh at a cost of ₹2,500 crore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.