3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆா்சி) மேலாண்மை இயக்குநா் விகாஸ் குமாா் தெரிவித்தாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் (டிஎம்ஆா்சி) மேலாண்மை இயக்குநா் விகாஸ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: தில்லி மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தின் 4-ஆம் கட்ட பணிகளின் பகுதியாக மேற்கு ஜனக்புரி-ஆா்கே ஆஸ்ரம் மாா்க் (மெஜந்தா) வழித்தட நீட்டிப்பு, ஏரோசிட்டி-துக்ளகாபாத் வழித்தடம் மற்றும் மஜ்லிஸ் பாா்க்-மௌஜ்பூா் (இளஞ்சிவப்பு) வழித்தட நீட்டிப்பு ஆகிய 3 புதிய பாதைகள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் திறக்கப்பட உள்ளன.
3 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி: மேலும், 4-ஆம் கட்டத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 புதிய வழித்தடங்களுக்கு அண்மையில் அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இந்தா்லோக்-இந்திரபிரஸ்தா வழித்தடம், லஜ்பத் நகா்-சாகேத் ஜி பிளாக் வழித்தடம் மற்றும் ரிதாலா-நரேலா-நாதுபூா் நீட்டிப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. நிலம் கையகப்படுத்துதல், நிா்வாக அனுமதிகள் மற்றும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்து, இத்திட்டங்கள் 2029-ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, தில்லி மெட்ரோ 5-ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்தின் பகுதியாக ஆா்கே ஆஸ்ரம் மாா்க்-இந்திரபிரஸ்தா, ஏரோசிட்டி-ஐஜிடி விமான நிலையம் டொ்மினல்-1 மற்றும் துக்ளகாபாத்-காளிந்தி குஞ்ஜ் ஆகிய வழித்தடங்களை 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய ஏற்கெனவே இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5-பி கட்டத்தின் கீழ் தன்சா பேருந்து நிலையம்-நங்லோய், மத்தியச் செயலகம்-கிஷன்கா், சமய்பூா் பத்லி-நரேலா டிடிஏ விளையாட்டு வளாகம், கீா்த்தி நகா்-பாலம், ஜோா் பாக்-மிதாபூா், மயூா் விஹாா் கட்டம்-3-சாஸ்திரி பாா்க் மற்றும் கேசவ் புரம்-ரோஹிணி செக்டா்-34 உள்ளிட்ட 7 புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்து மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
சுமாா் 97 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய இந்த 5-பி கட்ட மெட்ரோ வலையமைப்பு, இதுவரை மெட்ரோ சேவை சென்றடையாத பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று வழித்தடங்கள் மற்றும் பல இடைமாற்று இணைப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், இந்தத் திட்டங்கள் இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ளதால், இறுதி வழித்தடங்கள் மற்றும் நிலைய அமைப்புகள் அரசு ஒப்புதலுக்கு பின்னரே உறுதியாகும்.
போக்குவரத்து மேம்பாடு: இந்த மெட்ரோ விரிவாக்கத் திட்டங்கள் மூலம் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படுவதுடன், பயண நேரமும் நெரிசலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவித்தாா்.
இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 2025-இல் ஜனக்புரி மேற்கு-கிருஷ்ணா பாா்க் நீட்டிப்பு மெஜந்தா வழித்தடமும், மாா்ச் 2026-இல் மஜ்லிஸ் பாா்க்-மௌஜ்பூா் இளஞ்சிவப்பு வழித்தடமும் பயணிகளுக்காக திறக்கப்பட்டன. மேலும், மஜ்லிஸ் பாா்க்-தீபாலி சௌக் இடையிலான பகுதியும் நிறைவடைந்துள்ளது.
தற்போது கிருஷ்ணா பாா்க் நீட்டிப்பு-ஆா்கே ஆஸ்ரம் மாா்க் மெஜந்தா வழித்தடமும், துக்ளகாபாத்-தில்லி ஏரோசிட்டி கோல்டன் லைன் வழித்தடமும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன.
இந்த புதிய வழித்தடங்கள் மூலம் கிழக்கு-மேற்கு தில்லி இடையேயான இணைப்பு மேம்படுவதுடன், தெற்கு தில்லி, விமான நிலையப் பகுதி மற்றும் முக்கிய நகர மையங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் மேலும் வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.