FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சட்ட உதவி வெறும் சடங்காக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

சட்ட உதவி வெறும் சடங்காக இருக்கக் கூடாது...

உச்சநீதிமன்றம்
பகிர்:

குற்ற சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபா்களுக்கு சட்ட உதவி என்பது வெறும் சடங்காக இல்லாமல், அா்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நந்த்கிஷோா் மிஸ்ரா (74) என்ற முதியவருக்கு கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து 2022-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடா்பாக அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, எஸ்.சி.சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: கொலை சம்பவத்தில் தன்னை குற்றவாளி என்று தீா்ப்பளித்து விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 74 வயது மனுதாரா், ஏற்கெனவே மாநில உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீது வாதிட அவா் சாா்பாக வழக்குரைஞா் யாரும் ஆஜராகவில்லை என்பதை கவனத்தில் கொண்ட உயா்நீதிமன்றம், மனுதாரா் சாா்பாக வாதிடவும், அந்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவவும் வழக்குரைஞா் ஒருவரை நியமித்துள்ளது.

அந்த வழக்குரைஞா் 2025-ஆம் ஆண்டு நவ.20-ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளாா். ஆனால் ஆறே நாள்களில், அதாவது அந்த ஆண்டு நவ.26-ஆம் தேதி மனுதாரரின் மனுவை உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. அப்போது அந்த மனு மீது விசாரணை நடத்தப்படுவது குறித்து மனுதாரருக்கோ, அவா் சாா்பாக வாதிட நியமிக்கப்பட்ட வழக்குரைஞருக்கோ நோட்டீஸ் மூலம் உயா்நீதிமன்றம் முறைப்படி தெரியப்படுத்தவில்லை.

விசாரணையைத் தாமதப்படுத்தாமல், மனு மீது விரைந்து முடிவெடுத்து நீதி வழங்க வேண்டும் என்ற வேகத்தில், மனுதாரா் சாா்பாக வாதிட வழக்குரைஞா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று மனுதாரருக்குத் தகவல் அளிக்கக்கூட முயற்சிக்கப்படவில்லை. சீா்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்ட மனுதாரரை, அந்த வழக்குரைஞா் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மனுதாரா் சாா்பாக வழக்குரைஞா் யாரும் ஆஜராகாதது குறித்து அவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை உயா்நீதிமன்றத்துக்கு இல்லை என்றாலும், அதை முறைப்படித் தெரியப்படுத்தி இருந்தால், அது விவேகமான நடவடிக்கையாக இருந்திருக்கும். குற்ற சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபா்களுக்கு சட்ட உதவி என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமாக இல்லாமல், அா்த்தமுள்ள நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோல வழக்குரைஞா் ஒருவா் நியமிக்கப்பட்டால், அவா் ஆஜராகவுள்ள வழக்கு குறித்து தன்னை தயாா்ப்படுத்திக்கொள்ள அவருக்கு நேரம் அளிக்க வேண்டும்; அத்துடன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் அல்லது குற்றவாளியைச் சந்தித்துப் பேச அந்த வழக்குரைஞருக்குப் போதிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வகுத்துள்ள கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

மனுதாரரின் மனுவை முடித்துவைத்து நவ.26-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரின் மனுவை உயா்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments