மமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!
மமதா மற்றும் மு.க. ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம் என ஜகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு...
மமதா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் தோல்விக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளே காரணம் என ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ் ஐ ஆர்) விரைவில் தொடங்கவுள்ளன. இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
இதுபற்றி, தடேபள்ளியிலுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பாதித்துள்ளது என ஜகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“ஒவ்வொரு கிராமத்திலும் சிறியளவில் உண்மையான வாக்குகளை நீக்கப்படுவது, தொகுதி அளவில் பெரிய பாதிப்பை உருவாக்கும். எஸ்ஐஆர் மூலம் மேற்கு வங்கத்தில் 91 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 94 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில் மட்டும் 45,982 வாக்குகள் நீக்கப்பட்டன. அங்கு மமதா பானர்ஜி 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதேபோல், தமிழ்நாட்டின் கொளத்தூரில் 71,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அங்கு மு.க. ஸ்டாலின் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ஆந்திரத்தின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் தொடர்புடைய வாக்குகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியதுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியைக் குறிப்பிட்டு அங்கு ஒரே பெயரில், ஆயிரக்கணக்கான சந்தேக வாக்குகள் இருப்பதாகவும் ஜகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Former Andhra CM Jagan Mohan Reddy has alleged that the SIR was responsible for the defeat of Mamata Banerjee and M.K. Stalin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.