17 வயது சிறுவன் கொலை: கொலையாளியை சுட்டுக் கொன்ற உத்தரப் பிரதேச காவல்துறை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூர்யா சௌஹான் என்ற 17 வயது சிறுவன் பக்ரீத் அன்று கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி சுட்டுக்கொலை.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூர்யா சௌஹான் என்ற 17 வயது சிறுவன் பக்ரீத் அன்று கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான அசாத்தை காவல்துறையினர் இன்று (மே 31) காலை சுட்டுக் கொன்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரின் கோடா பகுதியில் உள்ள நவ்நீத் விஹார் காலனியைச் சேர்ந்தவர் சூர்யா சௌஹான். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஆசாத்துக்கும் மே 28 அன்று வாக்குவாதம் முற்றிய நிலையில், அசாத் சூர்யாவைக் கத்தியால் குத்தினார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த நிலையில், தனது மகனைக் கொலை செய்தவன் என்கவுன்டரில் கொல்லப்படும் வரை மகனின் இறுதிச் சடங்குகளைச் செய்யமாட்டேன் என சூர்யாவின் தாய் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
சூர்யா சௌஹான் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான ஆசாத் தலைமறைவானார். அவர் பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ. 50,000 ரொக்கப்பரிசு வழங்குவதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இதில், முதற்கட்ட விசாரணையில் ஆசாத்தும் சூர்யாவும் நண்பர்கள் என்றும், பைக் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலை வரை சென்றதாகவும் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூர்யாவை போனில் பேசி ஒரு இடத்திற்கு வரச்சொல்லி மர்ம நபர்களுடன் இணைந்து ஆசாத் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இதுபற்றிப் பேசுகையில், கொலையாளிகள் தப்பிக்க முடியாது என்றும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அசாத் காவல்துறைனரால் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோடா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஆசாத் (20) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
17-Year-Old Boy Murdered: Uttar Pradesh Police Shoot and Kill Killer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.