பாஜக எதிர்ப்பால் நடிகையின் விடியோ நீக்கம்! மீண்டும் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாஜக எதிர்ப்பால் பாலிவுட் நடிகை தியா மிர்சா விடியோ நீக்கப்பட்டது பற்றி...
பட்டாசு வெடிக்க வேண்டாம் என்ற பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு விடியோவை பாஜக கண்டனத்தை தொடர்ந்து மும்பை மாநகராட்சி நீக்கிய நிலையில், மீண்டும் பதிவேற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மும்பை மாநகரில் காற்றுமாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி சார்பில் ‘மாசு இல்லா தீபாவளி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
விழிப்புணர்வு விடியோ
இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகையும் இந்தியாவுக்கான ஐ.நா. சுற்றுச்சூழல் தூதருமான தியா மிர்சாவிடம் விழிப்புணர்வு விடியோ பெற்ற மும்பை மாநகராட்சி சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
மேலும், நடிகை மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட் மற்றும் கிரிக்கெட் வீரர் அஜிங்கே ரஹானே உள்ளிட்டோரும் மாநகராட்சிக்காக விழிப்புணர்வு விடியோ வெளியிட்டனர்.
விடியோ நீக்கம்
இந்த நிலையில், மும்பை பாஜக தலைவர் அமீத் சதம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்று தியா மிர்சாவிடமிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் பாரம்பரியங்கள் எங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவை” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தியா மிர்சாவின் விடியோவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த விழிப்புணர்வு விடியோவை உடனடியாக மும்பை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து நீக்கியது.
எனினும், மாதுரி தீட்சித், அஜிங்கே ரஹானே உள்ளிட்டோரின் விடியோக்கள் எக்ஸ் பக்கத்திலிருந்து மும்பை மாநகராட்சியால் நீக்கப்படவில்லை.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “தியா மிர்சா ஒரு திரைப்பட நடிகை மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒவ்வொரு மதத்திற்கும் அதன் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது.
ரமலான், பக்ரீத் பண்டிகையை ஹிந்துக்கள் மதித்து பங்கேற்பது போல், ஹிந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிக்காமல் விட்டால் தீபாவளியின் முக்கியத்துவம் குறைந்துவிடும். இதேபோல், மாசுபாடு குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும்” என்றார்.
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தியா மிர்சாவின் விழிப்புணர்வு விடியோவை நீக்கியதற்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளது.
நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, தியா மிர்சாவின் விடியோவை மும்பை மாநகராட்சி நீக்கியதற்கு கடும் கண்டனத்தையும், அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்கு அதிருப்தியும் தெரிவித்தது.
மேலும், தியா மிர்சாவைக் குறிவைத்து, அவரின் விழிப்புணர்வு விடியோவுக்கு மதச் சாயம் பூசிய அரசியல் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் அந்த விடியோவை மும்பை மாநகராட்சி பதிவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Actress dia mirza's video removed following opposition from BJP; High Court orders it to be re-uploaded
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.