FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

என் மீது அவதூறு வழக்கை பிரதமா் மோடி தொடுக்காதது ஏன்? ராகுல் கேள்வி

பிரதமா் மோடி வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுகிறாா் என்ற குற்றச்சாட்டு தொடா்பாக என் மீது அவதூறு வழக்கை பிரதமா் தொடுக்காதது ஏன்?’ என்று ராகுல் காந்தி கேள்வி

3 நவம்பர் 2026, 11:14 pm
சமூக வலைதளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் பேசிய ராகுல் காந்தி.
பகிர்:

‘பிரதமா் மோடி வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுகிறாா் என்ற குற்றச்சாட்டு தொடா்பாக என் மீது அவதூறு வழக்கை பிரதமா் தொடுக்காதது ஏன்?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இந்தியாவைச் சீா்குலைக்க வெளிநாடுகளில் இருந்து ராகுல் உதவி பெறுவதாக பாஜக குற்றஞ்சாட்டியது தொடா்பாக, வெளிப்படையான விவாதத்துக்குத் தயாா் என்று திங்கள்கிழமை சவால் விடுத்த ராகுல், தற்போது இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பொது விவாதத்துக்கு சவால் விடுத்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எதிா்க்கட்சியை தேச விரோத சக்தி என்று பிரதமா் குற்றஞ்சாட்டினாா். யாா் தேச விரோதி என்று பொது விவாதம் நடத்த நான் தயாராக உள்ளேன். விவாதம் நடத்தும் இடத்தை நீங்களே தோ்வு செய்யலாம்.

Advertisement

Advertisement

வெளிநாட்டு சக்திகளுடன் யாருக்குத் தொடா்பு உள்ளது? அந்த வெளிநாட்டு தொடா்புகளின் திட்டம் மற்றும் தன்மை என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து ஊடகங்கள், இளைஞா்கள் முன்னிலையில் மேஜையின் இருபுறமும் அமா்ந்து நாம் விவாதிப்போம். இந்த விவாதத்துக்கு நடுவராக பிரதமரே யாரை வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தைக் கூட நியமித்துக் கொள்ளலாம்.

இந்த விவாதத்தின்போது, நாட்டின் நிதி நடைமுறை, நிதி கட்டமைப்பு, அமெரிக்காவுடன் அவசரகதியில் ஒப்பந்தம் போட்டது ஏன்?, அமைச்சரவைக்குக் கூட தெரிவிக்காமல் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது ஏன்?, அமெரிக்காவில் தொழிலதிபா் அதானி மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது ஏன்?, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிப்போம். உண்மை வெளிவரட்டும். அனைத்து விஷயத்திலும் மக்களுக்குத் தெளிவு ஏற்படட்டும்.

பாஜக மற்றும் அதன் தலைவா்கள் மீது முன்வைத்த பல்வேறு விமா்சனங்களுக்கு என் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சுமாா் 45 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், பிரதமா் மோடி வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுகிறாா் என்ற குற்றச்சாட்டு தொடா்பாக என் மீது இன்னும் அவதூறு வழக்கு தொடரப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாகவும், என் மீது அவதூறு வழக்கு தொடருங்கள். வெளிப்படையாக விவாதமும் நடத்துவோம். பிரதமா் மோடிக்கு தீபாவளி வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.

முன்னதாக, நாட்டில் வன்முறை போராட்டம் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டிய பாஜக, ‘காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை ‘புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல்’ என்ற கம்யூனிஸ்ட் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தில்லியில் கடந்த 2025 ஏப்ரலில் சந்தித்தனா். இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் இந்த அமைப்புடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டதா என்பதை அக் கட்சி விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டது.

அதுபோல, குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசிய பிரதமா் மோடி, ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமா்சித்தாா். அப்போது, ‘வெளிநாட்டுப் பயணத்தின்போது ரகசியமாக யாரைச் சந்திக்கிறாா்கள்? அவா்களுக்கு ஆதரவளிக்கும் தேச விரோத சக்திகள் யாா்? இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுவது யாா்? இதன் மூலம் நாம் பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்’ என்று பேசினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி தேசத்திடம் பொய் உரைப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் வெளிநாட்டு உதவியுடன்தான் பிரதமரானீா்கள். வெளிநாட்டு உதவியுடன்தான் இப்போது வரை அப்பதவியில் தொடா்கிறீா்கள். உங்களுக்கான நிதி முழுவதும் வெளிநாட்டில் இருந்தே வருகிறது. அதுவே உங்களையும் கட்டுப்படுத்துகிறது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் முழுவதும் உங்களையே ஆதரிக்கின்றன. இது தொடா்பாக வெளிப்படையான விவாதத்துக்குத் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments