அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு ஜனநாயக உணர்வுக்கு கிடைத்துள்ள வெற்றி: ப. சிதம்பரம்
அமெரிக்க இடைத்தேர்தல்களில் ஜனநாயக உணர்வு வெற்றி பெற்றுள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக...
புது தில்லி: அமெரிக்க இடைத்தேர்தல்களில் தாராளமயமாக்கல், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக உணர்வுதான் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தல்களில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமெரிக்க நாடாளுமன்ற கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. மேலும், முக்கிய மாநில ஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தேர்தல்களின் தாக்கம் அமெரிக்காவைத் தாண்டி உலக அளவிலும் பேசும் பொருளானது.
இந்த நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு ஜனநாயக உணர்வுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அமெரிக்கத் தேர்தல்கள், சட்டவிரோத குடியேற்றம், ஆசியர்கள் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களின் வருகை, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்றன.
இவை, அன்றாட வாழ்க்கைச் செலவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, எரிபொருள் விலைகள், சட்டம்-ஒழுங்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கியமான பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிடும் சூழலை உருவாக்கின.
இருப்பினும், இறுதியில் தாராளமயக் கொள்கைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவையும், அமெரிக்காவின் அடிப்படை ஜனநாயக உணர்வும் மற்றும் மனப்பான்மையே வெற்றி பெற்றுள்ளன.
"சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது" என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமெரிக்க மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
டிரம்பின் குடியரசுக் கட்சியின் கோட்டைகளான டெக்சாஸ், ஜார்ஜியா, அயோவா மற்றும் ஓஹியோ ஆகிய மாகாணங்களில் பெரும் தோல்விகளைச் சந்தித்தது; அங்கு ஆளுநர் பதவிகளை ஜனநாயகக் கட்சியினரிடம் இழந்துள்ளது.
டெக்சாஸ், மெய்ன், தென் கரோலினா, வட கரோலினா, கன்சாஸ், அயோவா மற்றும் ஓஹியோ ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற செனட் தேர்தல்களிலும் குடியரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த மாகாணங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப், "வாக்களிக்கும்போது நானே வேட்பாளராக நிற்பதாகக் கருதி வாக்களியுங்கள்' என்றார்.
ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டின் மீதும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்; இதன் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) இரு அவைகளிலும் குடியரசுக் கட்சியினருக்கு இருந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இந்த பெரும் தோல்விகளுக்கு, ஈரான் மீதான போர் உள்ளிட்ட டிரம்பின் கொள்கைகள் மீதான கோபமே காரணமாகக் கருதப்படுகிறது.