அரிசி விலை, பதுக்கலை தடுக்க மத்திய அதிரடி முடிவு
நாடு முழுவதும் அரிசி மற்றும் நெல் இருப்பு வைக்கும் நிறுவனங்களுக்கும் இருப்பு வெளிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்து...
புதுதில்லி: நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், போதுமான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்யவும், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரிசி மற்றும் நெல் இருப்பு வைக்கும் நிறுவனங்களுக்கும் இருப்பு வெளிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரிசி, நெல் இருப்பு விவரம் கட்டாயம்
நாடு முழுவதும் அரிசி, நெல் இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், மொத்த, சில்லறை வியாபாரிகள், பெரிய வணிக நிறுவனங்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களின் இருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய அரசின் https://foodstock.dfpd.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
பாசுமதி, பாசுமதி அல்லாத அரிசி, சாதாரண அரிசி, புழுங்கல் அரிசி, உடைந்த அரிசி மற்றும் நெல் என ஆறு வகைகளில் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பு உச்சவரம்புக்கு அனுமதி
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப அரிசி, நெல் இருப்புக்கு உச்சவரம்பு விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு 2027 ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.
தென் மாநிலங்களில் அரிசி கிடைப்பதை அதிகரிக்க தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு கூடுதல் பாரத் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலிவு விலையில் அரிசி கிடைப்பதுடன், சில்லறை விலையும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு
சந்தையில் அரிசி தாராளமாகக் கிடைப்பதை உறுதி செய்யவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை நடவடிக்கைகளைத் தடுக்கவும், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணிக்கும்.
அரிசி விற்பனை இலக்கு உயர்வு
உள்நாட்டு விநியோகத்தை சீரக்க, 2026-27-ம் ஆண்டுக்கான திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், மின்னணு ஏலம் மூலம் விற்கப்படும் அரிசியின் இலக்கு 25 லட்சம் டன்னில் இருந்து 50 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 31 வரை 25 லட்சம் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 11 லட்சம் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையின் மூலம் சந்தையில் பொருள்கள் கிடைப்பது கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரிசிக்கான சில்லரை விலை பணவீக்கம் 5.89 சதவீதமாக இருந்தது. இது செப்டம்பரில் 8.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நாடு முழுவதும் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.